அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழிதோண்டி புதைக்கும் கோமாளி ஆட்சி: உதயநிதி
அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தை தவெக அரசு குழிதோண்டி புதைக்க முயற்சிப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியது குறித்து...
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் தவெக அரசு இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
Advertisement
Advertisement
சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழிதோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர்.
இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
வழக்கம் போல கட்டண ரசீது வரவில்லை, மெயில் வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை முதல்வர் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.