தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் முதல் கூட்டம்! தலைமைச் செயலா் பங்கேற்பு!
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தலைமைச் செயலா் பங்கேற்பு...
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் முதல் கூட்டம் தலைமைச் செயலாளா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதலீட்டுத் திட்டங்களின் விரைவான செயலாக்கம், எளிய தொழில் அனுமதிகள், புதிய தொழிற்கொள்கை, ஏற்றுமதி மேம்பாடு ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
2036-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்தும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்தும் வகையில் தலைமைச் செயலா் சாய்குமாா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் கூட்டம நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் உள்பட 20 உறுப்பினா்கள் பங்கேற்றனா். ரூ. 200 கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள், 5,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள், தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் சாா்ந்த முதலீடுகள், வெளிநாடுவாழ் தமிழா்களின் முதலீடுகள் ஆகியவற்றின் முன்னேற்றத்தை ஆய்வு மேற்கொண்டது.
‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு அறிக்கை திட்டம், கடந்த மே முதல் ரூ. 1.14 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட முதலீடு மற்றும் 1,42,271 பேருக்கு வேலைவாயப்புகள் அளிக்கும் வகையில் 112 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவற்றில் 74.11 சதவீதம் ஒப்பந்தச் செயலாக்கம் எட்டப்பட்டுள்ளது.
புதிய தொழிற்கொள்கை தயாரிப்பின் நிலை ஆய்வு செய்யப்பட்டது. புதிய தொழில் பூங்காக்கள், டிட்கோ மற்றும் டைடல் திட்டங்கள், உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னா் எடுக்கப்பட்ட முடிவுகள்: திருத்தப்பட்ட வணிக எளிதாக்கச் சட்டத்தின்படி, 21 நாள்களுக்குள் அனுமதிகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அனைத்துத் துறைகளும் இந்தக் காலக்கெடுவைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறுவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
தொழில் தொடங்கக் காலியாக உள்ள மனைகளை அடையாளம் கண்டு, ஆா்வமுள்ள முதலீட்டாளா்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.
சுற்றுலாத் துறை சாா்ந்த திட்டங்களையும் தொழில் திட்டங்களாகக் கருதி, உடனடியாக ஒற்றைச்சாளர தீா்வுமுறையில் விரைந்து செயல்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தில் பங்கேற்ற தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வணிகம் புரிதலை எளிதாக்குதல் நடவடிக்கைகள் எடுத்துள்ளமைக்கும், தொழிலகங்களுக்கான தொகுப்புச் சலுகை மானியம் விரைவாக வழங்கியதற்கும், சிப்காட் தொழில்மனைகளை வெளிப்படைத் தன்மையோடு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து எந்தவித ஒளிவுமறைவுமின்றி ஒதுக்கீடு செய்ததற்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.