FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தவெக அரசு! இபிஎஸ் கடும் விமர்சனம்

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம் குறித்த சம்பவம் பற்றி இபிஎஸ் கருத்து...

32 வினாடிகள் முன்பு
இபிஎஸ் - ENS
பகிர்:

காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர், காவல் நிலையத்தில் இரவு தங்கவைக்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,

"மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையத்திலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அதிர்ச்சி அளிக்கின்ற செய்தி வந்துள்ளது.

சினிமா படங்களுக்கு டாப்-10 வரிசை போடுவதுபோல, தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வரிசை போடும் அளவிற்கு நிலைமை சந்தி சிரிக்கிறது.

ஒருபுறம் செஞ்சி சிறுமியை இன்னும் “தாய்மாமா” அரசின் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை;

மறுபுறம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை முதல் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை வரை இன்னும் பல கொள்ளைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தவெக அரசு.

இதே சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு பிஜிஎம் (BGM) போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு நிஜமாக நம்பி ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த தவெக கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.

காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது.

நேற்றைய தினம் இதேபோல் பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது உள்ளிட்ட தொடர் செய்திகள் முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா?

“நீதியும் வரல. சாரியும் வரல.”

பொறுப்பெடுத்துக்கொள்வது (Accountability) என்றால் என்னவென்றாவது தெரியுமா முதல்வரே?

காவல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் குற்றச் செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Madurai custodial death: EPS condemned TVK govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.