என் மீது திட்டமிட்டுப் பொய்யான வழக்கைப் பதிவு செய்துள்ளனர்: முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு
திட்டமிட்டுப் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக எ.வ. வேலு தெரிவித்திருப்பது பற்றி...
தன் மீது திட்டமிட்டுப் பொய்யான வழக்கைப் பதிவு செய்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுத் திடலைச் சமன்படுத்துவதற்காக, அருகிலுள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஊழல் தடுப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் எ.வ. குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் சனிக்கிழமை ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என் மீது பொய்யான வழக்கைத் திட்டமிட்டு தவெக அரசு பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளேன். எனக்கு நீதிமன்றங்களின் மீது அளப்பரிய நம்பிக்கை உள்ளது. சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்.
மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர்வதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது. மக்களை ஏமாற்றி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது" என்று தெரிவித்தார்.