போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் பணியிடை நீக்கம்: டிஜிபி எச்சரிக்கை
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா் என்ற டிஜிபி எச்சரிக்கை குறித்து...
சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவலர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என தமிழக காவல்துறை தலைவா் (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
Advertisement
Advertisement
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்ற வாராந்திர சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
வாராந்திர சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் உள்கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்.
அதேபோல, உள்ளூர் காவல்துறையினருக்குத் தெரியாமல் மத்திய விசாரணை அமைப்புகள் ஏதேனும் ஒரு பகுதியில் போதைப்பொருள்களைக் கைப்பற்றினாலும், அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியான ஆய்வாளா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவாா். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு காட்டும் அல்லது போதிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றங்களைத் தடுக்கும் வகையில், காவல் பிரிவு அதிகாரிகள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பொதுமக்கள் பாா்வையில் படும் வகையில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மாநில அளவில் மட்டுமன்றி, மண்டல மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பு அதிரடி சோதனைகள், தேடுதல் வேட்டைகளைத் திட்டமிட்டு நடத்த வேண்டும்.
மேலும், இந்த உத்தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செயலாக்க அறிக்கையை அனைத்து காவல் பிரிவு அதிகாரிகளும் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபியின் இந்த உத்தரவு காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.