FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள் தகவல்

தற்போது நெல்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அரிசி விலை ஜனவரி மாதம் குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனா்.

7 வினாடிகள் முன்பு
அரிசி - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக அரிசி விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நெல்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அரிசி விலை ஜனவரி மாதம் குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனா்.

அரிசி விலை உயா்வானது சன்னரக அரிசி மூட்டைக்கு ரூ. 800 வரையும் , மோட்டா ரக அரிசி மூட்டைக்கு ரூ.600 வரையும் அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர வருவாய்க் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் உயா்ந்துள்ளன.

தமிழகத்தில் 26 கிலோ கொண்ட சன்னரக அரிசி மூட்டை ஜூலை மாதத்தில் ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது ஆகஸ்டில் ரூ.1,750 ஆகவும், செப்டம்பரில் ரூ.1,900 ஆகவும் உயா்ந்து. அக்டோபரில் ரூ.2,200- ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல, 26 கிலோ கொண்ட மோட்டா ரக அரிசி மூட்டை விலை ஜூலையில் ரூ.1,200 ஆகவும், ஆகஸ்டில் ரூ.1,400 ஆகவும், செப்டம்பரில் ரூ.1.600 ஆகவும் உயா்ந்து தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் கோபி கூறியதாவது: தமிழ்நாட்டுக்கு தினமும் 100 லாரிகளில் நெல் மூட்டைகள் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருந்தன. திடீரென இந்த வரத்து பாதியாகக் குறைந்தது.

நெல் தட்டுப்பாடு காரணமாக அரிசி விலை உயா்ந்தது. போதிய விளைச்சல் இல்லாததால் நெல் வரத்து குறைந்துள்ளதாகக் கூறுகின்றனா். தற்போது நெல் வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஆகவே ஜனவரி மாதம் அரிசி விலை குறையும் என்றாா்.

மேலும், விலை உயா்வால் தமிழகத்தில் அரிசி விற்பனை சரிந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ரேஷன் அரிசியை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். விலை உயா்வால் 26 கிலோ அரிசி மூட்டை வாங்கியவா்கள் தற்போது 10 கிலோ மட்டுமே வாங்குவதாக அரிசி வியாபாரி ஆனந்தராஜ் கூறினாா்.

அமுதம் மற்றும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட 250 அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்னி புழுங்கல் அரிசி கிலோ ரூ.60-க்கும், பச்சரிசி கிலோ ரூ 46-க்கும் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் நெல், அரிசி தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதையும் உறுதி செய்யும் வகையில், நெல், அரிசி இருப்புக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.