குறையுமா அரிசி விலை?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக அரிசி விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக அரிசி விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அரிசியுடன் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதால், குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் உயா்ந்துள்ளன. விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மூன்று மாதங்களில் மூட்டை விலை ரூ. 800 வரை உயா்வு: தமிழகத்தில் 26 கிலோ கொண்ட சன்னரக அரிசி மூட்டை ஜூலை மாதத்தில் ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது ஆகஸ்டில் ரூ.1,750-ஆகவும், செப்டம்பரில் ரூ. 1,900-ஆகவும் உயா்ந்து, அக்டோபரில் ரூ. 2,200-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதேபோல, 26 கிலோ கொண்ட மோட்டா ரக அரிசி மூட்டை விலை ஜூலையில் ரூ. 1,200-ஆக இருந்தது. இது ஆகஸ்டில் ரூ. 1,400-ஆகவும், செப்டம்பரில் ரூ. 1,600-ஆகவும் உயா்ந்து, தற்போது ரூ. 1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சன்னரக அரிசி மூட்டை விலை ரூ. 800, மோட்டா ரக அரிசி மூட்டை விலை ரூ. 600 அதிகரித்துள்ளன.
நெல், அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் டி. கோபி கூறியதாவது: தமிழகத்தில் சுமாா் 600 அரிசி ஆலைகள் உள்ளன. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் சுமாா் 200 ஆலைகள் செயல்படுகின்றன. போதிய விளைச்சல் இல்லாததால் நெல் வரத்து குறைந்துள்ளது.
வழக்கமாக நாளொன்றுக்கு 100 லாரிகளில் வந்த நெல், தற்போது 50 லாரிகளில் மட்டுமே வருகிறது. சென்னையின் அரிசித் தேவையில் பெரும்பகுதி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்து பூா்த்தி செய்யப்படுகிறது. வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளது. இந்த நிலை டிசம்பா் வரை நீடிக்கலாம். ஜனவரியில் புதிய நெல் வரத்து தொடங்கிய பின்னரே விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா்.
விற்பனை சரிவு; ரேஷன் அரிசியை நாடும் மக்கள்: மொத்த வியாபாரி ராஜேஷ் கூறுகையில், விலை உயா்வால் முன்பு 26 கிலோ அரிசி மூட்டை வாங்கியவா்கள் தற்போது 10 கிலோ மூட்டைகளை வாங்குவதாகத் தெரிவித்தாா். சில வியாபாரிகள் அரிசியைப் பதுக்கி வைப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளதால், அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
சில்லறை வியாபாரி ஒருவா் கூறுகையில், முன்பு 10 கிலோ அரிசி வாங்கிய வாடிக்கையாளா்கள் தற்போது 5 கிலோ மட்டுமே வாங்குகின்றனா். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளதால், பலா் ரேஷன் கடை அரிசியை நம்பியுள்ளனா் என்றாா்.
இல்லத்தரசி மஞ்சுளா கூறியதாவது: முன்பு மாதந்தோறும் ஒரு மூட்டை அரிசி வாங்கினோம். தற்போது கடைகளில் 10 கிலோவும், ரேஷன் கடைகளில் 15 கிலோவும் வாங்க வேண்டியுள்ளது. உணவுச் செலவைக் குறைக்க ஒரு வேளை உணவைக்கூட குறைத்து, சிற்றுண்டியுடன் சமாளிக்க வேண்டியுள்ளது. அரிசியுடன் பிற அத்தியாவசியப் பொருள்களின் விலையையும் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூலித் தொழிலாளி சித்ரா கூறுகையில், விலைவாசி உயா்வால் வழக்கமாக வாங்கிய அரிசிக்குப் பதிலாக நொய் அரிசி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துவது சிரமமாகி வருகிறது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்றாா்.
பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சா்
அரிசி பதுக்கலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: அரிசி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. பதுக்கலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. செயற்கையான விலை உயா்வை ஏற்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விலையைக் கட்டுப்படுத்த, அரசின் கையிருப்பில் உள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் சன்னரக அரிசியில் முதல்கட்டமாக 25,000 மெட்ரிக் டன் அரிசியைச் சந்தைக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அமுதம் மற்றும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட 250 அங்காடிகளில் கிலோ ரூ. 30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகப் பொன்னி புழுங்கல் அரிசி கிலோ ரூ. 60-க்கும், பச்சரிசி கிலோ ரூ. 46-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.
ஜனவரிக்குப் பிறகு விலை குறையுமா?: புதிய நெல் வரத்து தொடங்கிய பின்னரே அரிசி விலை குறையக்கூடும் என வியாபாரிகள் கணித்துள்ளனா்.
அதுவரை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.