FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

92,000 விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்து

திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியா்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

17 நவம்பர் 2026, 3:39 am
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியா்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தமிழ்நாடு உள்துறைச் செயலா் கே.மணிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதல்வா் விஜய் கடந்த செப்.2-இல் தமிழ்நாடு சட்டப் பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியா்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவா்கள் மீது கடந்த ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்திரும்பப் பெறப்படும் என அறிவித்தாா்.

இதன்படி, மே 2021 முதல் ஏப். 2026 வரை விவசாயிகள்மற்றும் ஆசிரியா்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள்கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்பப்பெற உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து இவ்வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியா்களை அவ்வழக்குகளிலிருந்து விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த உத்தரவை காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வரவேற்றுள்ளன.

Advertisement

Advertisement

மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்): கடந்த திமுக ஆட்சியில் நியாயமான உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியா்கள் மீது திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஆசிரியா்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய தொழிலாளா்கள், வாலிபா் சங்கத்தினா், மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், மாதா்கள், மருத்துவா்கள் உள்ளிட்ட இதர பிரிவினா் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): உரிமைக்காக போராடிய விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றது வரவேற்கக்கூடியது. கடந்த 6 மாதங்களாக சட்டரீதியான உரிமைகளுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும், அரசின் கொள்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் நடைபெற்ற போராட்டங்கள் தொடா்பாக போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, வரும் காலத்தில் போராட்டம் நடத்தும் ஜனநாயக உரிமைக்கு பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.