என்ன, சாயந்திர வேளையில் துடைப்பத்தை கையிலேயே எடுக்கக் கூடாதா?
என்ன, சாயந்திர வேளையில் துடைப்பத்தை கையிலேயே எடுக்கக் கூடாது என்று சொல்லப்படுவது பற்றி...
நம் முன்னோர்கள், வீட்டில் வழிபடும் தெய்வங்கள் மட்டுமின்றி, பல்வேறு பொருள்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்கென தனித்தனியாக விதிமுறைகளை பின்பற்றி வந்துள்ளனர்.
அதில், சாஸ்திரம், வாஸ்து என பலவையும் அடங்கும். இன்றைய தலைமுறையினரிடம் இது பற்றி சொன்னால், ஏன்? எதற்கு? என்ன காரணம்? என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கச் சொல்வார்கள்.
Advertisement
Advertisement
ஆனால், நம் முன்னோர்களோ, பல்வேறு விஷயங்களையும் அந்தக் காலத்துக்கு ஏற்றார்போல ஆராய்ந்து தெளிந்துதான் பல எழுதப்படாத விதிமுறைகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
அதில் ஒன்றுதான் வீட்டில் துடைப்பத்தின் பயன்பாடு. நமக்கு துடைப்பம் என்பது வீட்டை சுத்தம் செய்ய என்று மட்டும் வைத்திருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்களோ அதையும் தெய்வ சக்தியாகவே பார்த்துள்ளனர்.
எனவேதான், மாலை நேரத்துக்குப் பிறகு துடைப்பத்தை எடுத்து வீட்டை சுத்தம் செய்யக் கூடாது என்பதுதான் முதல்விதியாக வைத்திருந்தார்கள்.
பொதுவாகவே, மாலையில் சூரியன் மறைந்த பிறகு சில வேலைகளை செய்யவே கூடாது. வீட்டை சுத்தம் செய்வது, துடைப்பது, துணிகளைத் துவைப்பது, வாசலை சுத்தம் செய்வது போன்றவற்றை தவிர்த்தனர்.
துடைப்பம் என்பது வீட்டில் தீய சக்தியை ஒழிக்கும், வறுமையை ஒழிக்கும், எதிர்மறை சக்தியை ஒழிக்கும் ஆற்றல் பெற்றதாகக் கருதப்படுகிறது. ஆனால், அதனை பகலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் சூரியன் மறைந்த பிறகு, மாலையில் துடைப்பத்தை எடுத்தால் வீட்டுக்கு எதிர்மறை ஆற்றல் வந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
அதுபோல, துடைப்பத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். குப்பைத் தொட்டியுடன் சேர்த்து வைக்கக் கூடாது.
அது மட்டுமல்ல, துடைப்பத்தை எப்போதும் கீழே படுத்த வாக்கில்தான் வைத்திருக்க வேண்டும். சுவரில் சாய்த்து நிற்க வைக்கக் கூடாது என்றும் முன்னோர்கள் கூறுகிறார்கள்.
வீட்டில் இருப்பவர்கள் நடந்து செல்லும்போது காலில் படாத இடத்தில்தான் துடைப்பத்தை வைக்க வேண்டும், உடைந்த, சேதமடைந்த துடைப்பத்தை வீட்டில் பயன்படுத்தக் கூடாது என்றும் இதனால் வீட்டில் நிதிநிலை பாதிக்கப்படலாம் என்றும் நம்பி வந்துள்ளனர்.
இவை அனைத்தும் முன்னோர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்பட்டிருப்பவை.