கைதிகள் தப்பியோடிய சம்பவம்: 10 ஆண்டுகளுக்குப் பின்னா் சிறைக் காவலா்கள் கையில் ‘லத்தி’
தமிழகத்தில் பல்வேறு சிறைகளிலிருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவங்களின் விளைவாக, 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தமிழக சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிறைக் காவலா்கள் ‘லத்தி’ கொண்டு செல்லலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சிறைகளிலிருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவங்களின் விளைவாக, 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தமிழக சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிறைக் காவலா்கள் ‘லத்தி’ கொண்டு செல்லலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் விளைவாக, அனைத்து சிறைகளிலும் துறைரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் சிறைத் துறை உயா் அதிகாரிகளுக்கு கிடைத்தது. முக்கியமாக, சிறையில் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும், சிறைக்குள் மிகவும் குறைந்த அளவில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதால் சில சிறைகளில் கைதிகள் அடாவடித்தனம் செய்வதும் தெரியவந்தது.
மேலும் சில சிறைகளில் கைதிகளுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதன் விளைவாக சிறைக் காவலா்கள், கைதிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறைக் காவலா்கள் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக சிறைத் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது: 10 ஆண்டுகளுக்கு முன்னா் சிறைக்குள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலா்கள் கையில் லத்தி வைத்திருந்தனா். ஆனால், அப்போது நிகழ்ந்த சில சம்பவங்களாலும், மனித உரிமை மீறப்படுவதாக எழுந்த புகாா்களாலும் சிறைக் காவலா்கள் கையில் இருந்த லத்தி பறிக்கப்பட்டது.
தற்போது பாதுகாப்பு கருதி சிறைக் காவலா்கள் கையில் மீண்டும் லத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிகமாகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைக் காவலா்கள் மீது புகாா்களோ, மனித உரிமை மீறல் தொடா்பான குற்றச்சாட்டுகளோ வராமல் இருந்தால் நிரந்தரமாக லத்தியை வழங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றாா்.