நாளை மிகத் தீவிர புயலாக வலுப்பெறும் அக்வான்: சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
அக்வான் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை (நவ. 19) சென்னை, திருவள்ளூா் ஆகிய இரு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
‘அக்வான்’ புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை (நவ. 19) சென்னை, திருவள்ளூா் ஆகிய இரு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ‘அக்வான்’ புயலாக வலுப்பெற்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது.
இது, செவ்வாய்க்கிழமை வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அதே பகுதியில் நிலவியது. மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது, மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை (நவ. 19) காலை மிகத் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும்.
Advertisement
Advertisement
இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை (நவ. 20) நெல்லூா் மற்றும் துனி இடையே மிகத் தீவிரப் புயலாக கரையைக் கடக்கக் கூடும். அப்போது 145 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.
இதன் காரணமாக புதன்கிழமை (நவ.18), சென்னை, திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகம், ஏனைய வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் வட வானிலை காணப்படும்.
மஞ்சள் எச்சரிக்கை: மிகத் தீவிர புயலாக வலுப்பெறும் நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ. 19) ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இரு மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 18) முதல் சனிக்கிழமை (நவ. 21) வரை, அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.
ஆந்திர கடலோரப் பகுதிகள்: புதன்கிழமை மாலை முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை புயல் கரையைக் கடக்கும் வரை 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதன்பிறகு, காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும்.