நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?
நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? என்பது குறித்த உண்மை நிலவரம் பற்றி..
நெல்லை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பு குறைந்திருக்கிறது, 9 பேர் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர், 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது காய்ச்சல் பாதிப்பால் 9 பேர் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விளக்கம் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் செல்வராஜன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 பேர் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைத் தலைவர் மருத்துவர் ரத்தினகுமார் பேசுகையில், காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், பொது மருத்துவத் துறை சார்பில் 30 படுக்கைகள் கொண்ட தனி காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப உப்பு கரைசல் (IV Fluids) மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உடனடியாக வழங்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகளைத் தாமதமின்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும், எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் மருத்துவர் ரத்தினகுமார் தெரிவித்தார்.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.