தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!
தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!
தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் (e-CSR) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி காவல் நிலையத்திற்குச் செல்லாமலேயே ஆன்லைனில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1,200 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று டிஜிபி மாகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தமிழக காவல்துறையில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்குச் நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வகையில், மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை தலைமை இயக்குநரும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் தலைமைப் பொறுப்பு அதிகாரியுமான டிஜிபி மாகேஷ் குமார் அகர்வால், மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் டிஜிபி முன்னிலையில் இந்தப் புதிய வசதியைத் தொடங்கி வைத்தார்.
இதன்படி, பொதுமக்கள் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.police.tn.gov.in என்ற முகவரியில் தங்களது புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான e-CSR ஒப்புதல் ரசீதும் வழங்கப்படும்.
மூன்று நாள்களுக்குள் புகார்தாரர்களைத் தொடர்புகொள்ள நடவடிக்கை
இதுகுறித்து டிஜிபி மாகேஷ் குமார் அகர்வால் கூறுகையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான காவல்துறை சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. e-CSR வசதி மூலம் புகார் அளிப்பவர்களுக்கு உரிய ஒப்புதல் ரசீது கிடைப்பது உறுதி செய்யப்படும். கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், மூன்று நாள்களுக்குள் புகார்தாரர்களைத் தொடர்புகொண்டு, தேவைக்கேற்ப விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைப்பார்கள்.
ஆன்லைனில் பெறப்படும் புகார்களில் எத்தனை புகார்கள் முதல் தகவல் அறிக்கையாக (FIR) மாற்றப்பட்டுள்ளன, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.
மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக ஆன்லைனில் புகார் அளிக்கும் வகையில் புதிய இணையதள வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றார்.
காவல் மரணங்கள், அத்துமீறல்கள் மீது கடும் நடவடிக்கை
தூத்துக்குடி மற்றும் மதுரையில் அண்மையில் நடைபெற்ற காவல் நிலையச் சம்பவங்கள் குறித்து அவர் பேசுகையில், காவல் மரணங்கள் மற்றும் காவல் நிலையங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாக காவல்துறை ஜீரோ டாலரன்ஸ் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.
சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், நீதித்துறை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையில் தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவரின் நடமாட்டமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றார்.
பொது இடங்களில் மது அருந்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோரைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் ட்ரோன் கண்காணிப்பு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1,200 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாகப் பேசிய டிஜிபி, காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் சில சட்டரீதியான தடைகள் இருந்தன. தற்போது நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி தொடங்கியுள்ளது.
விரைவில் 1,200 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆறு மாதங்களில் காவல்துறைக்கு கூடுதலாக 34,000 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.
காவலர்களுக்கு வார விடுமுறை வழங்குவதற்குப் போதிய ஆள்பலம் தேவைப்படுகிறது. தற்போது அனைவருக்கும் வார விடுமுறை வழங்க முடியாத நிலை இருந்தாலும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் முக்கியப் பண்டிகைகளின்போது அமைதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு மனித உயிரும் எங்களுக்கு முக்கியம். குற்றங்களைக் குறைப்பதே காவல்துறையின் முன்னுரிமை என்றும் தெரிவித்தார்.