டேனிஷ் கோட்டையை நவ. 25 ஆம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம்!
பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு டேனிஷ் கோட்டையை கட்டணமின்றி பார்வையிடலாம்.
பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, இன்று (நவ. 20) முதல் நவ. 25-ஆம் தேதிவரை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை கட்டணமின்றி பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 1600 முதல் 1634-ஆம் ஆண்டுவரை தரங்கம்பாடியை ஆட்சிசெய்த டேனிஷ்காரா்கள்(டென்மார்க் நாட்டினர்) 1620-இல் கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுணுக்கத்துடன் இக்கோட்டையை கட்டினர். தற்போது 400 ஆண்டுகளை கடந்தும், டேனிஷ் கோட்டை கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
பழைமை மாறாமல் கம்பீரமாக உள்ள இந்தக் கோட்டையை பார்வையிட தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
Advertisement
Advertisement
இங்குள்ள அகழ்வைப்பகத்தில் 14, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்டுத்திய பொருள்கள் மற்றும் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள், பீங்கான், மண், மரத்தாலான பொருள்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்க் கருவிகள், 16- ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு, காட்சிக்கு வைத்துள்ளனர்.
மேலும், கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை பழைமை மாறாமல் புதுப்பித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது.
வரலாற்று சின்னங்கள் நிறைந்த இந்தக் கோட்டையை, இன்று முதல் 25 ஆம் தேதி வரை ஒரு வாரக் காலத்திற்கு கட்டணமின்றி அனைத்து தரப்பினரும் பார்வையிடலாம் என்று டேனிஷ்கோட்டை நிர்வாகம் அறிவித்துள்ளது.