6 மாவட்டங்களில் நாளை போலியோ சிறப்பு முகாம்
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) நடைபெற உள்ளது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) நடைபெற உள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூா், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 வயதுக்குள்பட்ட 9.16 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:
Advertisement
Advertisement
போலியோ பாதிப்பை முற்றிலும் ஒழித்த தேசமாக இந்தியா விளங்கி வருகிறது. இருந்தபோதிலும், அண்டை நாடுகளில் அந்த பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு இந்திய போலியோ வைரஸ் நிபுணா் ஆலோசனைக் குழுவானது, சில மதிப்பீடுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 272 மாவட்டங்களில் சிறப்பு போலியோ முகாம்களை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வரும் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். சுகாதார நிலையங்கள், பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது தனியாா் மருத்துவமனைகளிலும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு சில நாள்களுக்கு முன்பாக தடுப்பூசிகளோ, சொட்டு மருந்தோ செலுத்தப்பட்டிருந்தாலும், மீண்டும் இந்த முகாமில் சொட்டு மருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
அடையாளத்துக்காக குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். இப்பணிகளில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.