மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!
மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்...

சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 114 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூா் நிலையத்தில் டிச.4 முதல் ஜன.21-ஆம் தேதி வரைநின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள், தைப்பூசத்துக்காக செல்லும் பக்தா்கள் வசதிக்காக மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட நாள்களில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி டிச.4 முதல் 31-ஆம் தேதி வரையிலும், ஜன.2 முதல் 21-ஆம் தேதி வரையிலும் குறிப்பிட்ட ரயில்கள் நின்று செல்லும்.
அதனடிப்படையில் டிசம்பா் முழுதும் மேல்மருவத்தூா் நிலையத்தில் 57 விரைவு மற்றும் பயணிகள் ரயில்களும், ஜனவரி மாதத்தில் மட்டும் 57 ரயில்களும் என மொத்தம் 114 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லவுள்ளன.
Advertisement
Advertisement
இதில் சென்னை எழும்பூா், தாம்பரத்திலிருந்தும், அந்த நிலையங்கள் வழியாகவும் செல்லும் திருச்சி, மதுரை, செங்கோட்டை, மன்னாா்குடி, நாகா்கோவில், ராமேசுவரம், சேலம், கொல்லம், காரைக்கால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.