போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டியே என மு.க. ஸ்டாலின் பேச்சு...

தமிழ்நாட்டில் போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டியே என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 22) விமர்சித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழா இன்று (நவ. 22) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தவெக ஆட்சியை விமர்சித்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
Advertisement
’தமிழா விழிப்புணர்வு கொள்’ என்று விழித்தெழ வைக்க வேண்டியது நம் கடமை. வரலாற்றுக் கடமையாக நினைத்து இதைச் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையினரை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் அறிவாயுதம்தான் குடிஅரசு தொகுப்பு.
படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என ஆலைகளை நாம் கொண்டுவந்தோம். பொருளாதாரத்திலும் சமூக குறியீட்டிலும் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது.
கடந்து வந்த பாதையை தவிர்த்தால் வருங்கால தலைமுறையினருக்கு அது ஆபத்து. நாம் பட்ட கஷ்டங்களை அடுத்த தலைமுறைக்குக் கூற வேண்டும்.
தற்போது ஆளும் ஆட்சியும் பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது. ஆனால், ஜோசியத்தை நம்பிதான் ஆட்சி நடக்கிறது.
மூடநம்பிக்கையில் மூழ்கிப்போன இவர்கள் (தவெகவினர்) ஃபேஷனுக்காக மட்டுமே பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராக வைத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் கொள்கைகளுக்கு எதிராகவே இவர்கள் செயல்படுகின்றனர்.
தேர்வில் சில கேள்விகளை விடுவதுபோல பெரியார் கொள்கையில் நிறைய விட்டுவிட்டார் முதல்வர் விஜய். ரீல்ஸ் ஆட்சியை யார் விமர்சித்தாலும் குறிப்பாக ஜென் ஸி இளைஞர்கள் விமர்சித்தால் கைது செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் நடுவில்தான் போட்டி என்று முன்பு கூறியிருந்தேன். இப்போது அது அடுத்தகட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது.
போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி. அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுப்பதில் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் நடுவில்தான் போட்டி.
சாப்பிடாமல் இருந்தால்தான் மயக்கம் வரும். ஆனால் இப்போது அரிசி விலையைக் கேட்டாலே மயக்கம் வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் முதல்வர் ஏதேனும் வாய் திறந்து பேசுகிறாரா?
மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் சவால் விடுகிறார். ஆனால், குரியன் ஜோசப் குழுவை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தவெகவினர் கலைத்துவிட்டனர். இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா? என்று தெரியவில்லை. இத்தனை காலம் நாம் உருவாக்கியதை 6 மாத ஆட்சியில் நாசமாகிவிட்டது தவெக.. என மு.க. ஸ்டாலின் பேசினார்.