தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது பற்றி...
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியான நிலையில், வழக்குரைஞர் ஆர். திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று (நவ. 24) விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தார்.
Advertisement
Advertisement
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று (நவ. 24) புகார் அளித்ததை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் இன்று காலை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்கு நேரில் சென்ற காவல்துறை அதிகாரிகள் புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், அவரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்யவும் காவல்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண்ணை பாலியல் ரீதியாக அணுகுதல், பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் மற்றும் ஆபாசச் செய்கை ஆகிய குற்றச்சாட்டுகள் கீழ், பிஎன்எஸ் 75, 78, 79 உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அருள் விக்னேஷுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.