யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!
யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர் என்று காவல்துறை தரப்புக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தரப்பில், ஜூலை மாதமே தலைமைச் செயலரிடம் எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறித்து புகார் அளிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள், அது அரசுக்கு தர்மசங்கடமாக ஆகிவிடும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் நீதிமன்றம் சார்பில் அனுப்பட்ட அதிகாரி, விசாரித்து அவர் அளித்த தகவல்களை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த போதுதான், கடந்த ஜூலை மாதமே தமிழக தலைமைச் செயலரிடம், எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறித்து புகார் அளித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த தகவல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, நீதிபதி லட்சுமி நாராயணன் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தலைமைச் செயலரிடம் புகார் அளித்த பிறகும், விசாரணை நடக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். உள் விசாரணைக் குழு எப்போது அமைப்பீர்கள்? என்றும் இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள், அவ்வாறு செய்தால் அது அரசுக்கு தர்மசங்கடமாகிவிடும் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement
மேலும், ஜூலை மாதமே நடவடிக்கை எடுத்திருந்தால், புகார் இந்த அளவுக்கு வந்திருக்காது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரே விசாரணை அதிகாரி என்று நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு, எஸ்பிக்கு பதில் வேறு உயர் அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, ஐஜி அல்லது டிஐஜி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், பெண் ஆட்சியர் தன் தரப்பில் ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ள நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
ஜூலையில் ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும், இதுவரை நடந்த விசாரணை என்ன என்று நீதிபதி லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பியதோடு, யாரைவது காப்பாற்றுவது தெரிந்தால் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்றார். இதற்கு, அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில், விசாரணையை நவ. 27க்கு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.