திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! தமிழிசை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தவறு மேல் தவறு செய்து வருவதாகவும், இந்துக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவதைக் கண்டு வணங்குவதற்காக நாங்கள் அனைவரும் அமைதியான முறையிலும், மன உணர்வோடும் வந்திருக்கிறோம். ஆனால், எங்களது தெய்வ பக்திக்கு மதச் சாயம் பூசி, பிரிவினைவாதம் போல் சித்தரித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள். வழியில் எங்கள் கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் இடைக்காலத் தீர்ப்பு இருந்தபோதிலும், தமிழக அரசு வரம்பை மீறிச் செயல்படுகிறது. ஜவஹருல்லா, திருமாவளவன் ஆகியோர் இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கும் அரசு, எங்களை மட்டும் தடுத்து நிறுத்தி கைது செய்கிறது. இன்றைய தினம் எங்களிடம் பாரபட்சமாக நடந்து கொண்டால், 'மதச்சார்பற்ற அரசு' என்ற பெயரை முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு இழக்க நேரிடும்.
Advertisement
Advertisement
கூட்டணி நிர்பந்தத்திற்குப் பணிந்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததன் மூலம், வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு அநீதி இழைத்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் போலவே திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் நியாயம் மறுக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 ஆகியவை அனைவருக்கும் இணையான உரிமையையும் மரியாதையையும் வழங்குகின்றன. ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பித்தும், முருகன் குடிகொண்டுள்ள சிறப்பு மண்டலத்தைச் சிவப்பு மண்டலமாக மாற்றியும் அரசு அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது.
பக்தர்கள் வரக்கூடிய இடத்தில் 144 தடை உத்தரவு எதற்கு? காவிகள் இருக்க வேண்டிய இடத்தில் காக்கிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான நிர்மல் குமார், கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் போலவே இதிலும் மௌனம் காக்கிறார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படாவிட்டால், அதற்கான பின்விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும். நீதிமன்றம் கூறியும் நீதி கிடைக்காதபட்சத்தில், பாஜக தலைவர்கள் கூடி ஆலோசித்து அடுத்தகட்டத் தீவிர நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.