முகப்பு

நாமக்கல்லில் காவல்துறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள் திடீர் போராட்டம்!

காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து வழக்குரைஞர்கள் போராட்டம் தீவிரம்..

25 வினாடிகள் முன்பு
நாமக்கல்லில் காவல்துறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள் திடீர் போராட்டம்!
வழக்குரைஞர்கள் போராட்டம்
பகிர்:

நாமக்கல்லில் காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புதன்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோபால கிருஷ்ணன் (65). தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். ரூ. 1 கோடி கேட்டு அந்த கும்பல் அவரை தாக்கியது. தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது ஓட்டுநர் அம்ஜத் ஆகியோர் தப்பித்து வந்தனர். இது தொடர்பாக ராசிபுரம் காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை மேற்கொண்டு நாமகிரிப்பேட்டை வழக்குரைஞர் உள்பட ஒன்பது பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த வழக்குரைஞர் அய்யாவு என்பவருக்குத் தொடர்பு இருப்பதாக, சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஸ் அசோக்கிடம் புகார் மனு அளித்திருந்தார்.

Advertisement

Advertisement

வழக்குரைஞர் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திங்கள்கிழமை முதல் நாமக்கல் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் கோபால கிருஷ்ணனைக் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ந.மாரப்பன், பொதுச் செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோபாலகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பேரணியாக வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையிடச் சென்றனர். ஆனால், காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து உள்ளே விட அனுமதி மறுத்தனர்.

இதனால் ஆவேசமடைந்த வழக்குரைஞர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். அதன் பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) குத்தாலிங்கத்தை நேரில் சந்தித்து கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினர்.

புதன்கிழமை மாலை 5 மணிக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்குரைஞர்கள் போராட்டம் தீவிரமாகும். தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வர் என ஒருங்கிணைந்த வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.