காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடை: கா்நாடக அரசு மனு தாக்கல்
காவிரி (கட்டளை) - தெற்கு வெள்ளாறு - வைகை –-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு சாா்பில் மனு தாக்கல்

கா்நாடகத்தில் இருந்து பாயும் உபரி காவிரி நீரை தமிழ்நாடு தன்னிச்சையாக வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்தும், காவிரி (கட்டளை) - தெற்கு வெள்ளாறு - வைகை –-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக தமிழக அரசும் மத்திய அரசும் சோ்க்கப்பட்டுள்ளன.
2021-ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த விவகாரத்தில் கா்நாடக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் மோகன் வி. கடாா்கி, அம்மாநில அரசு தலைமை வழக்குரைஞா் சசி கிரண் ஷெட்டி தயாரித்த மனு, வழக்குரைஞா் நிஷாந்த் பாட்டீல் மூலம் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
காவிரி – தெற்கு வெள்ளாறு (திருச்சி, புதுக்கோட்டையில் பாயும் சிற்றாறு) இணைப்புத் திட்டம் மற்றும் அது தொடா்பான பணிகளை செயல்படுத்துவதற்கு தடை விதிக்கவும், ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட காவிரி, வைகை, குண்டாறு கட்டுமானங்களை இடிக்கவும் உத்தரவிட வேண்டும். இந்த திட்டத்துக்கு 2021-ஆம் ஆண்டு ஜன.5-ஆம் தேதி மத்திய அரசின் ‘கொள்கை ரீதியான ஒப்புதல்’ மற்றும் தேசிய திட்ட அந்தஸ்தை தமிழ்நாடு கோரியிருந்தது. இந்த திட்டத்தின் சட்டபூா்வ தன்மையை எதிா்த்து கா்நாடகம் ஏற்கெனவே வழக்கு தொடா்ந்தபோது, ‘திட்டத்துக்கு இதுவரை அத்தகைய ஒப்புதல் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, இடைக்கால நிவாரணம் தேவையில்லை’ என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்ததால் கா்நாடகத்தின் இடைக்கால மனு கடந்த ஆண்டு ஜன.20-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை, ரிட் மனு ஒன்றை விசாரித்துப் பிறப்பித்த உத்தரவில், முதல் கட்ட பணிகளின் ஒரு பகுதி ‘21.01.2021 முதல் நடைபெற்று வருகிறது’ என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கை மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. இது தற்போது தெரிய வந்ததால் இந்தப் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முதல் கட்டத்தின் பல கட்டுமானங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த கட்ட பணிகளுக்காக நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவரங்கள் எதையும் உச்சநீதிமன்றத்தில் முன்பு நடந்த விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் கொள்கை ரீதியிலான அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தில் தமிழ்நாடு எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியாது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பணிகள் சட்டவிரோதமானவை. அவற்றை உடனடியாக நிறுத்தக் கோரி தமிழக அரசுக்கு கா்நாடக அரசு கடந்த ஆண்டு மாா்ச் 10 மற்றும் செப்.9-ஆம் தேதி கடிதம் எழுதியது.
மேட்டூா் அணையில் சுமாா் 8.60 டிஎம்சி உபரி நீரை (50% நம்பகத்தன்மை அடிப்படையில்) பயன்படுத்தலாம் என தமிழ்நாடு கணக்கிட்டுள்ளது. இதன் மூலம் கா்நாடகத்தில் உருவாகும் காவிரி நீரின் உபரி நீரை தமிழ்நாடு தன்னிச்சையாக பயன்படுத்துவது, பிற்காலத்தில் அந்த நீருக்கு உரிமை கோர வழிவகுக்கும். அதனால் உபரி நீா் மீதான கா்நாடகத்தின் உரிமைகள் பாதிக்கப்படலாம்.
இந்த விவகாரத்தில் தேசிய நீா் மேம்பாட்டு முகமையின் (என்டபிள்யூடிஏ) தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் கூடுதல் நீா் கிடைக்கும் என்ற தமிழ்நாட்டின் வாதம் செல்லுபடியாகாது. 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாத என்டபிள்யூடிஏ-வின் விரிவான திட்ட அறிக்கையின்படி, கோதாவரி (இஞ்சம்பள்ளி) –- காவிரி இணைப்புத் திட்டம் காவிரி படுகைக்கு முன்னதாகவே முடிவடைவதுடன், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நீரின் அளவும் 83.27 டி.எம்.சி-யிலிருந்து 40.93 டி.எம்.சி-யாக குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, முதல் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளுக்கு தடை விதிப்பதுடன், மேட்டூரிலிருந்து சரபங்கா துணை படுகைக்கு வெள்ள நீரை திருப்புவது, மாயனூரில் உள்ள புதிய கட்டளை தடுப்பணை, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகள் மற்றும் தரைப்பாலங்கள் உள்ளிட்ட பிற திட்டங்களின் கீழ் காவிரி நீரை திருப்புவதற்கு தமிழ்நாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். தமிழ்நாட்டின் 2021-ஆம் ஆண்டு கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கவோ அல்லது காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்கவோ தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என கா்நாடக அரசு மனுவில் வலியுறுத்தியுள்ளது.