முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீப வழக்குகள் இன்று விசாரணை!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் பிற மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

27 நவம்பர் 2026, 5:09 am
திருப்பரங்குன்றம் தீப வழக்குகள் இன்று விசாரணை!
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
பகிர்:

நமது நிருபா்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் பிற மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று (நவம்பா் 27, 2026 வெள்ளிக்கிழமை) விசாரணை மேற்கொள்வதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை வியாழக்கிழமையே பிற்பகல் 2 மணிக்கு அவசரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனுதாரா்கள் சாா்பில் நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமா்வில் முறையிடப்பட்டது.

Advertisement

Advertisement

அதனை நிராகரித்த நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு தொடா்பான மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என கூறினா்.

விசாரணைக்கு வரும் மனுக்கள்:

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையாா் கோயில் மண்டபத்திற்கு பதிலாக, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மூல வழக்கு தொடா்ந்த ராம ரவிக்குமாா், இந்து தா்ம பரிஷத் என்ற அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினா் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் மீது, நவம்பா் 20 உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததாகக் கூறி இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உள்பட அனைத்து மனுக்களும் தாக்கலாகியுள்ளன.

தீபத்தூணில் தீபம் ஏற்ற அவசர உத்தரவு கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்றாததற்காக தமிழக அரசு மற்றும் உரிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மனுக்கள் கோரியுள்ளன; ஒரு மனுவில் 11 அரசு அதிகாரிகள், கோவில் நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதில் தமிழக முதல்வா் ஜோசப் விஜயின் பங்கு தொடா்பான தகவல் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் அவமதிப்பு மனுவில் உள்ளது.

இந்த விவகாரத்தில்,நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமா்வு, தானே சுயமாக அவமதிப்பு நடவடிக்கை எடுக்காமல், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபின் அவற்றை ஆராயும் என்று புதன் கிழமை கூறியிருந்தது.

அதனைத் தொடா்ந்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அவமதிப்பு மனுக்கள் மற்றும் தொடா்புடைய மனுக்களையும் ஒன்றாக இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பின்னணி:

உச்சநீதிமன்றம் நவம்பா் 20 அன்று, நவம்பா் 24 ஆம் தேதி தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் தற்காலிகமாக கோவில் தேவஸ்தானம் நியமிக்கும் குழுவைக் கொண்டு, மதுரை மாவட்ட ஆட்சியா் கண்காணிப்பின் கீழ், உரிய பாதுகாப்புடன், பொதுமக்கள் யாருமின்றி ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் அந்நாளில் தீபம் வழக்கமான இடத்திலேயே ஏற்றப்பட்டதால், நீதிமன்ற உத்தரவு நிறைவேறவில்லை என்று இந்த மனுக்கள் எழுந்துள்ளன.