முகப்பு

கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டி

தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு...

கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டி
உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.

பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மனு அளித்தார்.

இந்த நிலையில், இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

அவருடன் திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

“பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி டிஜிபியிடம் நேற்று புகார் அளித்தோம். தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் நடக்கக்கூடிய பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் 80 சதவிகிதம் பேர் தவெக நிர்வாகிகள்தான். குற்றச்சாட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.

தமிழக டிஜிபியிடம் புகார் அளித்த பிறகாவது முதல்வர் தூக்கத்திலிருந்து எழுந்து நடவடிக்கை எடுப்பார் என்று நினைத்தோம். ஆனால், எனது பேட்டியை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடுகிறார்கள். ஆனால், முதல்வர் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல், குற்றவாளிகள் பக்கத்தில் சொகுசாக படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, பொதுத்துறை, ஐஏஎஸ் நலன் உள்ளிட்ட துறைகள் முதல்வரின் கீழ் தான் இருக்கிறது. அவர்தான் பொறுப்பு அமைச்சர். தொடர்ந்து குற்றவாளிகள் பக்கத்தில் முதல்வர் இருப்பதால்தான் குற்றங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இந்த ஆட்சியின் மேல் நம்பிக்கை இல்லாததால், சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

தலைமைச் செயலாளர் 116 நாள்களாக குற்றத்தை மறைக்கும் வேலைகளை செய்துள்ளார். ஜூலை 31 அன்றே தலைமைச் செயலாளரிடம் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். அவர் ஏன் மூடி மறைத்தார்? முதல்வரின் பார்வைக்கு எடுத்துக் கொண்டு போனாரா? முதல்வரிடம் தெரிவித்திருந்தால் முதல்வரின் தவறு.

மாவட்ட ஆட்சியரிடம் வேறு மாவட்டத்துக்கு மாறுவதற்கு தலைமைச் செயலாளர் பேரம் பேசியுள்ளார். ஆகையால் தலைமைச் செயலாளர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். உடந்தையாக இருந்த முதல்வரையும் குற்றப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த சம்பவம் நடக்கவே இல்லை எனக் கூறிய மூன்று அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்களில் சுமார் 700 படுகொலைகள் நடந்துள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனும் அவரது ஆதரவாளர்களும் சொந்த கட்சியின் பெண் நிர்வாகியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

இதெல்லாம் சட்டப்பேரவையில் பேசினோம், ஆனால், முதல்வர் பதிலளிக்கவில்லை. இன்று பெண் மாவட்ட ஆட்சியருக்கே தொல்லை அளித்துள்ளனர். குற்றவாளிகளை அழைத்து கண்டிப்பார் என எதிர்பார்த்தால், அவர்களை வரவழைத்து தீபாவளி பரிசு வழங்கியுள்ளார்.

பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர், மனு கொடுக்க வந்தவரை அடித்துள்ளார். பின்னர், அவரை வரவழைத்து விடியோ வெளியிட்டனர்.

இந்த ஆட்சியில் இதுவரை 10 பெண் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். செஞ்சியில் குழந்தை காணாமல் போயி 45 நாள்கள் ஆகிறது. ஆனால், குழந்தையை கண்டுபிடிக்காமல் ஜோதிடரிடம் கேட்டு காவல் நிலையத்தில் பூஜை செய்கிறார்கள்.

இதுவரை 9 காவல் மரணங்கள் நடந்துள்ளது. போதைப் பொருள் விஷயத்தில் மோசமான நிலையில் உள்ளது. அனைத்து போதைப் பொருள் கடத்தல் வழக்கிலும் ஆளுங்கட்சியினர் சிக்கியுள்ளனர்.

தலைமைச் செயலாளர், டிஜிபி-யை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பி மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

summary

Chief Minister and Chief Secretary should be included in the Kallakurichi case! Udhayanidhi’s interview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.