முகப்பு

சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெளியான பரபரப்பு தீர்ப்பு பற்றி...

27 நவம்பர் 2026, 4:43 pm
சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!
கார்த்திக், மோகன்
பகிர்:

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 21-ஆம் தேதி கோவை, சூலூரை அடுத்துள்ள கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், கண்ணம்பாளையம் குளம் அருகேயுள்ள தென்னந்தோப்புப் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேதப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே குதித்துத் தப்பிக்க முயன்ற கார்த்திக்கிற்கு வலது கை மற்றும் வலது கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமிக்குக் கடையில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

அன்றைய தினம் தமிழகக் காவல்துறை டி.ஜி.பி.-யாகப் பதவி வகித்த சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தி விசாரணையைத் துரிதப்படுத்தினார். வழக்கின் தீவிரம் கருதி காவல்துறையினர் மிக விரைவாகச் செயல்பட்டு, சம்பவம் நடந்த 21 நாட்களில் 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 221 முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நவம்பர் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வழக்கின் தீர்ப்பை வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இவ்வழக்கில் இன்று(நவ.27) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், வழக்கில் கைதான இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி தண்டனையின் முழுவிவரமும் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

summary

The court has delivered a sensational verdict declaring both individuals arrested in the case of the sexual assault and murder of a 10-year-old girl in Sulur guilty.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.