முகப்பு

பெரியார் அறிவுலக வழக்கு! அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!

பதிப்பக உரிமையாளரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது பற்றி...

37 வினாடிகள் முன்பு
பெரியார் அறிவுலக வழக்கு! அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!
பெரியார் அறிவுலகம் - DNS
பகிர்:

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கோவை பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள அவரை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் மோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையின்போது மோகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அரசு ஊழியராக இருந்தால்தான் ஊழல் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்படும் எனவும் அரசு ஊழியராக இல்லாத மோகனை ஊழல் தடுப்புச்சட்ட்த்தில் கைது செய்தது சட்டவிரோதம் எனக் கூறினார்.

Advertisement

Advertisement

மோகனின் வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டும் அதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். விசாரணைக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் வேண்டுமானால் இரண்டு நாள்கள் மட்டும் போலீஸ் காவல் வழங்கலாம் எனவும் மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக யாராவது ஒரு அதிகாரியின் பெயரை வெளிப்படையாகச் சொல்லுமாறு காவல்துறை அதிகாரி தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் மோகன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதால் மோகனிடம் விசாரணை நடத்த முடியவில்லை எனக் கூறினார்.

மேலும், மோகனுடன் தொடர்புடைய அரசு அலுவலர்கள், தனி நபர்கள் யார் என்பது குறித்தும், பணப் பரிவர்த்தனை குறித்துக் கண்டறியவும், வழக்கு சம்மந்தமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டுமென்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இன்று 12 மணியிலிருந்து காவல்துறை காவல் விசாரணைக்கு அனுமதித்து விசாரணை முடிந்து நவம்பர் 30ம் தேதி மாலை 4 மணிக்கு மோகனை ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையின் போது, மோகனை துன்புறுத்தக்கூடாது எனவும், அவரது வழக்குரைஞர் உடன் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.