பிரதமர், ஆர்எஸ்எஸ் விருப்பப்படி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்: திருமாவளவன் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து...

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் விருப்பத்தின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் அமைதிப் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும் கலந்து கொண்டார்.
பேரணியில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும். வன்முறைக்கு இடம்கொடுக்கக் கூடாது. மதவெறி சக்திகள் தலைதூக்கக் கூடாது.
Advertisement
Advertisement
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சாட்சியங்களின் அடிப்படையிலோ சான்றிதழ்களின் அடிப்படையிலோ வழங்கப்பட்டதல்ல. சங்பரிவார் (ஆர்எஸ்எஸ்) விருப்பப்படியே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
இந்தத் தீர்ப்பு, தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையைச் சிதைப்பதுடன், மதவெறி சக்திகளை ஊக்கப்படுத்துகிறது.
இந்த விவகாரத்தில் தவெக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசு வழக்குரைஞர்களும் சரியாக வாதாடியிருக்கிறார்கள்.
இருப்பினும், நீதிபதிகளே வழக்குரைஞர்களாக மாறி, சங்பரிவார் விருப்பப்படி இதனை ஒரு ஈகோ பிரச்னையாக எடுத்துக்கொண்டனர். தன் விருப்பம்போல் தான்தோன்றித்தனமாக தவெக அரசை அச்சுறுத்தும்வகையில் தீர்ப்பளித்துள்ளனர்.
கார்த்திகை திருநாளில் தீபமேற்றுவதுதான் மரபு. ஆனால், அந்த மரபையே தகர்த்தெறிவதாகத்தான் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. அந்தத் தூண், சர்வே தூணா? நில அளவைத் தூணா? அல்லது தீபமேற்றும் தூணா? என்பதை முடிவு செய்யாமலேயே தீபமேற்றச் சொன்னது தவறு. இது திட்டமிடப்பட்ட சதி.
வழக்கை முழுதாக முடித்திருக்க வேண்டும். மறுஆய்வு மனுவை விசாரிக்க வேண்டும். அதன் பிறகே தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அதற்கு முன்னரே தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை ஏன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை?
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி உள்பட நாடு முழுவதும் பாஜகவினர் கருத்துகள் பதிவிடுகின்றனர்.இந்த விவகாரத்தில் சூழ்ச்சி, வலைப்பின்னல் அரசியல் இருப்பது தெரிகிறது.
பிரதமரின் விருப்பத்தையே உச்ச நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியிருப்பதை அவரின் சமூக ஊடகப் பதிவில் இருந்து தெளிவாகிறது" என்று திருமாவளவன் தெரிவித்தார்.