திருப்பரங்குன்றம்: நீதியரசர்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்ட பூஜைப் பொருள்கள்
நீதிபதிகள் தலைமையில் மலைக்கு கொண்டு செல்லப்பட்ட மண்சட்டிகள், திரி, நெய் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் குறித்து...

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் தீபம் ஏற்றுவதற்காக மண்சட்டிகள், திரி, நெய் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தீபம் ஏற்றுவதற்குத் தேவையான தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்சட்டிகள், திரி மற்றும் நெய் உள்ளிட்ட பொருள்கள் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், நீதியரசர் வைத்தியநாதனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
Advertisement
Advertisement
அதற்குப் பதிலளித்த அவர், "மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும். வேறு எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்" என்று மட்டும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
மேளதாளங்களுடன் மலைக்கு கொண்டு செல்லப்பட்ட மண் சட்டிகள், நெய், திரி உள்ளிட்ட பொருள்கள்
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மண் சட்டிகள், நெய், திரி உள்ளிட்ட பொருள்கள், மேளதாளங்களுடன் மலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் பாதைக்கு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தீபச் சட்டியுடன் ரத வீதியில் வருகை தந்தனர். அவர்களுக்கு திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் இருவரும் தீபம் ஏற்றுவதற்கான உபகரணங்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு, இரண்டு பேரும் தங்கும் விடுதிக்கு புறப்பட்டனர்.
யாருக்கெல்லாம் அனுமதி
முன்னதாக, மலை மேல் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்படும்போது யார் யாருக்கெல்லாம் அனுமதி என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கல் தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள நீதிபதிகள் அறிவித்துள்ள நிலையில், கல் தூணில் பாதுகாப்பாக தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக, அங்கு சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பச்சைக் களிமண் பூசப்பட்டு, அதன் மீது இந்த மண்சட்டிகளை நிலைநிறுத்தி, நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.