தொகுதி மறுவரையறை: திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கம்யூ.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது குறித்து...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) வலியுறுத்தியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று மு. க. ஸ்டாலின் நேற்று (நவ. 28) அறிவித்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கி தமிழ்நாட்டில் மதச்சார்பின்மையையும் , மாநில உரிமைகளையும், தமிழ்நாட்டின் நலன்களையும் பாதுகாப்பதற்கு மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. திமு கழகம் சமூக நீதி, ஜனநாயகம், மதச்சார்பின்மையை இயல்பான கொள்கையாக கொண்ட பாரம்பரியம் கொண்ட இயக்கமாகும் .
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அதனை அமலாக்காமல், தொகுதிகள் மறு வரையறை மசோதாவுடன் இணைத்து பேசுவது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
மேலும், இம்மசோதவினால் பட்டியலின சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டிலும் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. தொகுதி மறுவரையறை ஆணையம், அதன் உறுப்பினர்கள் தேர்வு குறித்தும் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆணைய முடிவுகள் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படாது என்பது அதிகார அத்துமீறல்களுக்கு வழி வகுக்கும்.
இந்த நிலையில், பாஜக மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி, வகுப்புவாத சக்திகளின் ஆட்சியை நீடித்துக் கொள்ளும் உள் நோக்கத்துடன் கொண்டு வரும் தொகுதி மறு வரையறை மசோதாவை ஆதரிப்பது பெரும் வரலாற்றுப் பிழையாகும்.
இந்தியாவை இந்து நாடாக அறிவித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை கட்டமைக்கும் நோக்கத்தோடு , இந்த தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படுகிறது. இது தமிழ்நாட்டின் உரிமைகளை மட்டும் பாதிக்காது; ஒட்டுமொத்த இந்தியாவையே பாதிக்கும் பேரபாயம் கொண்டதாகும் .
எனவே , ஒட்டுமொத்த நாட்டின் நலன் கருதி, மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தை, நமது அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஜனநாயக மரபுகளையும், பன்மை கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு, திராவிட முன்னேற்றக் கழகம், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு அளிப்பது என்ற தனது முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.