முகப்பு

தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; சமரசத்துக்கே இடமில்லை! மு.க. ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை குறித்த நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; சமரசத்துக்கே இடமில்லை! மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)
பகிர்:

தொகுதி மறுவரையறை குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் ஆக. 13ல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 100 நாள்கள் கடந்த நிலையில், மழைக்கால கூட்டத் தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையொட்டி மீண்டும் நவ. 30 ஆம் தேதி மக்களவையும் டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவையும் சிறப்பு அமர்வாக கூடவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார்.

திமுக நிலைப்பாடு

இந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதற்கு பதிலளித்துள்ளார்.

இதுபற்றி மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நாட்டிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது திமுக தான்!

நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன்முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:

• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!

• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!

எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!

ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.

பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin on stance on delimitation bill

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.