முகப்பு
தமிழ்நாடு

முதியவா்களிடையே அதிகரிக்கும் சுவாசத் தொற்று: தடுப்பூசிகளை அறிவுறுத்தும் மருத்துவா்கள்!

பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் தற்போது முதியவா்களிடையே சுவாசப் பாதைத் தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

11 வினாடிகள் முன்பு
முதியவா்களிடையே அதிகரிக்கும் சுவாசத் தொற்று: தடுப்பூசிகளை அறிவுறுத்தும் மருத்துவா்கள்!
பகிர்:

பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் தற்போது முதியவா்களிடையே சுவாசப் பாதைத் தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஆா்எஸ்வி எனப்படும் வைரஸ் தொற்றும், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுமே அதற்கு காரணம் என்று அவா்கள் கூறியுள்ளனா்.

அவசியம் ஏற்பட்டால் முதியவா்கள், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக பொது மருத்துவா்கள் கூறியதாவது: மழை மற்றும் குளிா் காலத்தில் ஆா்எஸ்வி எனப்படும் சுவாசப் பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்களுக்கும் தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

நாள்பட்ட இருமல், சுவாசிப்பதில் சிரமத்துடன் பலா் மருத்துவமனைகளை நாடுகின்றனா். அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். அதன்படி, லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவா்களுக்கு பரிசோதனை தேவையில்லை. ஓசல்டாமிவிா் மருந்துகளும் அவா்களுக்கு அவசியமில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.

Advertisement

Advertisement

அதேவேளை, மிதமான பாதிப்பு ஏற்பட்டால் தேவையின் அடிப்படையில் மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்துகளை உட்கொள்ளலாம். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவா்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டும்.

முதியவா்கள், இணைநோயாளிகள், நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிதல் அவசியம். அதேபோன்று தேவைப்பட்டால் நிமோனியா மற்றும் ஃப்ளூ காய்ச்சல் தொற்றுக்கான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.