ஆசிய போட்டியில் 3 பதக்கங்கள்! வித்யா ராம்ராஜுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளி மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று அசத்தினார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை விமான நிலையம் வந்த வித்யா ராம்ராஜுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வித்யா ராம்ராஜ்,
பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதற்காக மாநில அரசு மற்றும் விளையாட்டுத் துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருவதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தனக்கு அளித்த ஆதரவால் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தங்களது பயிற்சியாளர் அளித்த ஒத்துழைப்பை குறிப்பிட்ட வித்யா ராம்ராஜ், கடந்த போட்டியைவிட இந்தப் போட்டியில் கடுமையாக உழைத்ததாகவும், 2023 ஆம் ஆண்டிலிருந்து சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
பதக்கத்தை இலக்காகக் கொள்ளாமல், நேரத்தை மேம்படுத்துவதே தங்களது முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் கூறினார்.
ஒலிம்பிக் வாய்ப்பு குறித்து பேசிய அவர், இந்தியா இன்னும் உலக அளவில் போட்டியிட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், தற்போதைய சாதனை தனக்கு முழுமையான நிறைவை அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் தொடர்ந்து முழுமையான ஆதரவு அளித்து வருவதாகவும், இளம் விளையாட்டு வீரர்கள், பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களை நம்பி தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும், ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வரிடமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கும்போது பயிற்சியாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
Three medals at the Asian Games: Enthusiastic welcome for Vidhya Ramraj in Coimbatore
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.