தவெக தூய சக்தி இல்லை, துயர சக்தி: மதுராந்தகத்தில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 3) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரப் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், ஆட்சியைப் பிடிக்க தவெக செய்த விஷயங்களைப் பற்றி விமர்சித்தார்.
அவர் பேசியதாவது,
Advertisement
Advertisement
”இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. தவிர்க்க முடியாத காரணங்களால் நடக்கும் தேர்தல் அல்ல,. தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல். உங்களின் மேல் திணிக்கப்பட்ட தேர்தல்.
4 மாதங்களுக்கு முன் நீங்கள் எல்லாம் ஒருத்தரை ஜெயிக்க வைத்தீர்கள். மெஜாரிட்டி இல்லாத இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர்கள் ராஜிநாமா செய்துவிட்டு திரும்ப வந்து வெக்கம் இல்லாமல் வேறொரு சின்னத்தில் வாக்கு கேட்கிறார்கள். அதுவும் 5 ஆண்டுகளாக அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அதே வேட்பாளரை வைத்துக்கொண்டே அமைச்சர் சொல்கிறார். அதை சொல்லிவிட்டு அவருக்கே வாக்கு கேட்கிறார்.
இதைவிட மதுராந்தகம் மக்களை கேவலப்படுத்த முடியுமா? அப்பட்டமாக நடைபெற்ற குதிரை பேரத்தால் இந்தத் தேர்தல் நடக்கிறது. நாம் இப்படிச் சொன்னால் முதல்வர் என்ன சொகிறார் தெரியுமா? எம்எல்ஏ பதவியை ராஜிநாம செய்துவிட்டுதான் அவர்கள் தவெகவில் சேர்ந்திருக்கிறார்களாம்.
அவர்கள் ராஜிநாமா செய்யவில்லை என்றால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்துவிடும். அதனால்தான், பொய்யான காரணத்தைச் சொல்லி அவைத் தலைவரிடம் ராஜிநாமா செய்திருக்கிறார்கள்.
அதையும் சொல்லியிருக்கலாமே சிஎம் சார். மக்களை ஏமாற்றுகிற முதல்வருக்கும், உங்களை ஏமாற்றுகிற ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கும் தக்க பாடத்தை மக்கள் தரவேண்டும்.
தினமும் சோசியல் மீடியாவையும், செய்திகளையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு, அவர் விரட்டியடிக்கப் படுகிறார், ஆளும் கட்சி வேட்பாளரால் தொகுதிக்குள் நுழையவே முடியவில்லை எனச் செய்திகள் தொடர்ந்து வருகின்றன.
மதுராந்தக மக்கள் தெளிவானவர்கள், . மானமுள்ளவர்கள். சுயமரியாதை உள்ளவர்கள், ரோஷமுள்ளவர்கள் என காட்டிவிட்டீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் மிகவும் பணிவுடன் தெரிவிக்கிறேன்.
ஆளுங்கட்சிக்காரர்கள் எவ்வளவு திமிருடன் பேசுகிறார்கள் தெரியுமா? தவெக சார்பில் ஒரு நாயை நிற்க வைத்தால் கூட மக்கள் வாக்களிப்பார்கள் எனப் பேசுகிறார்கள். இதையெல்லாம் தமிழகத்தில் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. மக்களை எளக்காரமாக நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் திமிரை நீங்கள்தான் அடக்கவேண்டும்.
நாம் செய்தது ஒரே தவறுதான். தேர்தலுக்கு முன் தவெகவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்துவிட்டோம். கொள்கை எதிரிகளோடு மோதினோம். இந்தக் கோமாளிக் கூட்டத்தைக் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டோம். அதோடு, எஸ்ஐஆர்-ல் பல லட்சம் மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டுவிட்டன.
இப்படி, ஒருசில வாய்ப்புகளால் தான் நமது வெற்றி வாய்ப்புகளை இழந்தோம். ஆனால், ஆட்சியமைத்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது தான் யதார்த்தம், உண்மை.
தவெகவுக்கு ஆதரவாக அலை வீசியிருந்தால், குறைந்தபட்சம் 150 இடங்களாவது ஜெயித்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவையான 118 இடங்கள் கூட கிடைக்கவில்லை. திமுக போட்டியிட்டு வென்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் இந்த ஆட்சி அமைந்தது.
முதல்வர் என்னதான் ஹைபிட்சில் கத்தினாலும் இது திமுகவுக்கு மக்கள் வழங்கிய வாக்குகளின் தயவால்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. அதை முதல்வர் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அந்த குறுகுறுப்பு அவருக்கும் இருக்கு. அதனால்தான் ஆதரவு கொடுத்த கட்சிகளை நம்பாமல், அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மறுபடியும் அவர்களையே தேர்தலில் நிற்கவைத்து தவெகவின் சீட்டுகளைக் கூட்டப் பார்க்கிறார்கள்.
இதில் பல்வேறு குதிரைபேரம் நடந்திருக்கிறது. சில நாள்களுக்கு முன் கூட உதயசூரியன் சின்னத்தில் வென்ற இரு எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு வந்தால் மந்திரியாகலாம் என்று ஒரு அமைச்சரே கூச்சமின்றி மேடையில் பேசுகிறார்.
ஆனால், பெரிய உத்தமர் போல முதல்வர் மேடையில் பேசுகையில் குதிரை பேரம், கழுதை பேரம் எல்லாம் இல்லை என்கிறார். அவருக்குப் பொருத்தமானப் பேரை எல்லாம் அவரே தேர்வு செய்யட்டும். நாம் கேட்பது, ஒரு பலவீனமான ஆட்சியை வைத்துள்ள கட்சி முடிந்தவரை மக்களுக்கு நல்லது செய்து ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும். அப்படித்தான் நான் எதிர்பார்த்தேன். அனைவரும் எதிர்பார்த்தோம்.
ஆனால், ஒரு மாதம் கூட தாங்கவில்லை. எம் எல் ஏக்களை வாங்குகிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டது, நாள்தோறும் கொத்துக் கொத்தாக கத்திக்குத்துகள், அரிவாள் வெட்டுகள் என ஆரம்பித்துவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைப்பற்றி, துப்புக் கொடுப்பவர்களைக் காப்பாற்றக் கூட துப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் சாதாரணமாக நடக்கிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களில் பாதிக்குப் பாதி தவெகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். தப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக புகார் கொடுத்தவர்களைக் கட்சியை விட்டு நீக்கி, குற்றசாட்டுக்கு ஆளான எம் எல் ஏவுக்கு போலீஸ் பாதுகாப்புத் தருகிறார்கள்.
இதுதான் தூயசக்தி ஆட்சியா? இல்லை. இது துயரசக்தி. இன்னும் பெரிய லிஸ்டே இருக்கிறது. மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய முடிந்ததா? பச்சைக் குழந்தை குடிக்கும் ஆவின் பாலைக் கூட சரியாக சப்ளை செய்ய முடியாத ஆட்சி நடக்கிறது. விலைவாசி கன்னாபின்னாவென ஏறியுள்ளது” எனப் பேசியுள்ளார்.
TVK is not a force of pure power, but a force of sorrow: M.K. Stalin campaigns in Maduranthakam!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.