FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் பதிலடி கொடுக்க வேண்டும்: இபிஎஸ்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தது குறித்து...

39 வினாடிகள் முன்பு
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் மூலம் இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், தவெக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து, ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையிலும், பிற கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு ரீல்ஸ் மற்றும் சினிமா காட்சிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதிமுக சார்பில், சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடம் குறுக்கு வழியில் குதிரை பேரத்தை நடத்தி, வாக்களித்த விரல் மை காய்வதற்குள் ஒருசில துரோகிகள், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

அதிமுகவுக்கும், வாக்களித்த மக்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்தவர்களே, தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இவர்கள் சிறிதும் வெட்கம் இல்லாமல் மீண்டும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்பதை சகித்துக்கொள்ள முடியாத மக்கள், துரோகிகளுக்கு தொகுதி முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை வலைதளங்களிலும், ஊடகங்களிலும் நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

தவெகவினர் தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லியும், தவறான வழியில் ஈடுபட்டும், வாக்காளப் பெருமக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். கழகத்தின் வெற்றிக்கு துரோகம் இழைத்து, தவெக சார்பில் போட்டியிடும் இவ்விரு வேட்பாளர்களுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

தவெக மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு, குறுக்கு வழிகளில் நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக உள்ளனர்.

விசுவாசத்துக்கு மூடுவிழா நடத்தி, துரோகத்திற்குப் பெயர்போன, தவெக சார்பில் மீண்டும் போட்டியிடும் துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில், அக். 6-ல் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அதிமுக சார்பில், மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் பானுமதிக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை அளித்து, தவெக, திமுக வேட்பாளர்களைத் தோற்கடித்து, அதிமுக வேட்பாளர்கள் இருவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்திடுமாறு, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், துரோகத்துக்கும் - அதிகார துஷ்பிரயோகத்துக்கும், இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுத்தார்கள் என்ற வரலாற்று நிகழ்வைப் படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

summary

Edappadi Palaniswami appeals to voters to vote for AIADMK in the by-election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments