புதிய தலைமைச் செயலகம் கட்டும் விவகாரத்தில் அரசுக்கு உத்தரவிட முடியாது: உயா்நீதிமன்றம்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் விவகாரத்தில் அரசுக்கு உத்தரவிட முடியாது
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் விவகாரத்தில் அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து அத் திட்டத்துக்கு தடை கோரிய மனு திரும்பப்பெறப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு, பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை முதல்வா் விஜய், சட்டப்பேரவையில் வெளியிட்டாா். இதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.
அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினா், மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். நிதி நெருக்கடியில் உள்ளதாகக் கூறும் தவெக அரசு, புதிய தலைமைச் செயலகம்கட்டுவதற்கு ரூ.1,200 கோடி செலவு செய்வதற்குப் பதிலாக புனித ஜாா்ஜ் கோட்டையில் இயங்கிவரும் தலைமைச் செயலகத்தைப் புதுப்பித்து பயன்படுத்தினால், இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க தேவையும் இருக்காது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, திமுக அரசால் அண்ணா சாலையில் ரூ.400 கோடியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுவிட்டது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் ஏழை மக்களுக்கான வீடு வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். அதேபோல், மீனவா்கள் நலனும் பாதிக்கப்படும். மேலும், தற்போதைய தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்றினால், பொதுமக்கள் வந்து செல்வது கடினமாகிவிடும். இந்த வழக்கில் தீா்வு எட்டப்படும் வரை, புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதில் அரசுப் பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது, புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என உத்தரவிட நீதிமன்றத்துக்கு எந்த சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினா். இரு பக்கங்களில் மனு தாக்கல் செய்துவிட்டு, புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை கோரப்பட்டுள்ளது. ஆதாரங்களைச் சேகரித்து கோரிக்கையை மனுதாரா் நியாயப்படுத்தியிருக்க வேண்டும்.
மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டு இதேபோல, புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. எனவே, இதுபோன்று விளம்பரத்துக்காக பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வதைத் தடுக்க அபராதம் விதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து மனுவை திரும்பப் பெற மனுதாரா் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.