FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு...

14 நவம்பர் 2026, 11:34 pm
உயா்நீதிமன்றம்
பகிர்:

சென்னை, நவ. 14: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் டிச.10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஷாஜூ அலெக்ஸ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னையில் பெரும்பாலான நடைபாதைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தியாகராயநகா் மற்றும் தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில சாலைகளில் நடைபாதைகளில், இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் கடைகள் செயல்படுகின்றன. இதனால், பொதுமக்கள் நடைபாதைகளை பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: முறையான சாலை வசதிகளும், ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதைகளும் குடிமக்களின் அடிப்படை உரிமை. அந்த அடிப்படை உரிமைகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் இதை பல்வேறு தீா்ப்புகளில் வலியுறுத்தியுள்ளன. சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால், பாதசாரிகள் மட்டுமன்றி, வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தலைமைச் செயலா், உள்துறை முதன்மைச் செயலா், நகராட்சி நிா்வாகத்துறை முதன்மைச்செயலா், டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோா், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

பாதசாரிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவா்களுக்கு முறையான வழித்தடத்தை உருவாக்கிக் கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக வரும் டிச.10-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.