கோவையில் நள்ளிரவில் நடுச்சாலையில் இரும்புக் கம்பியுடன் ரகளை செய்தவர் யார்?
கோவையில் நள்ளிரவில் நடுச்சாலையில் இரும்புக் கம்பியுடன் ரகளை செய்தவர் பற்றிய அடையாளம் தெரிந்தது.
கோவையில் நடுச்சாலையில் இரும்புக் கம்பியுடன் ரகளை செய்த இளைஞர் யார் என்பதும், அவர் 15 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியிருக்கிறது.
மனநலப் பிரச்சனை இருக்கிறது, எப்போது இப்படி மாறுவார்னு தெரியாது என்று உண்மையை உடைத்துள்ளனர் உறவினர்கள்.
கோவை, குனியமுத்தூர் பிரதான சாலையில் நேற்று அதிகாலையில், கையில் இரும்புக் கம்பியை வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளைத் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞர், 15 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement
கோவை - பாலக்காடு பிரதான சாலையில் அமைந்து உள்ள குனியமுத்தூர் பகுதியில் நேற்று அதிகாலையில் இளைஞர் ஒருவர் உலா வந்தார். கையில் நீளமான இரும்புக் கம்பியை வைத்துக் கொண்டு, அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளையும் மக்களையும் ஓட ஓட விரட்டித் தாக்கினார்.இதில் சில வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்; சில வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன.
இது குறித்து மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த குனியமுத்தூர் போலீஸார், அந்த இளைஞரை மீட்டு முதற்கட்டமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த அவரது உறவினர், அந்த இளைஞர் குறித்த சோக பின்னணியை வெளியிட்டு உள்ளார்.
"அவரது பெயர் முருகராஜ். சொந்த ஊர் வால்பாறை, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பணசத்திரத்தில் வளர்ந்தவர். அவர் இந்திய ராணுவத்தில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். புலியகுளம் பகுதியில் உள்ள 110-வது பட்டாலியனிலும் அவர் பணியாற்றி உள்ளார்.
ராணுவப் பணியின் போது ஏற்பட்ட மனநலப் பாதிப்பு காரணமாக அவர் ராணுவ மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஆழியாறில் எங்களோடு தங்கி இருந்து விட்டு வால்பாறைக்குச் சென்றார். அவருக்கு எப்போது மனநிலை மாறி இப்படி நடப்பார் என்றே தெரியாது. மது அருந்தும் பழக்கமும் அவருக்கு உண்டு.
முருகராஜின் தந்தை இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் உயிரோடு உள்ளார். தம்பி பி.எஸ்.என்.எல் (BSNL) ஊழியராகவும், மனைவி சிறைத் துறை வார்டனாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இரவு 10 மணிக்கு வால்பாறை பேருந்தில் ஏறியவர், எப்படி வழிமாறி குனியமுத்தூர் பகுதிக்கு வந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை என உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாட்டின் எல்லையில் 15 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மனநலப் பாதிப்பால் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.