ஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்
போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு உதயநிதி கண்டனம்...
தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தவிருந்த பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை வீட்டுக்காவலில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.
ஆனால், அவர்களின் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், நிர்வாகிகளை அவர்களின் வீடுகளிலேயே காவல்துறையினர் அடைத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இதற்கு கண்டனம் தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக தில்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில்,
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப் பணியாளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டத்திற்குப் புறப்படும் முன்பே வீட்டில் வைத்து கைது செய்யும் அளவுக்கு இந்த ரீல்ஸ் அரசு அராஜகம் செய்வது ஏன்?
விவசாயிகள் - மாணவர்கள் - செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?
மருத்துவப்பணிகளின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்கு பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த டம்மி முதலமைச்சர் முன்வர வேண்டும்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Udhayanidhi condemns the house arrest of medical staff who were set to protest.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.