முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு ரத்து!
செம்மண் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...
செம்மண் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
Advertisement
Advertisement
முன்னதாக, செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மூல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்பதால், அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூல வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறை வழக்கை தொடர அனுமதிக்க முடியாது எனக்கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
The Madras High Court has issued an order quashing the money laundering case registered under the Prevention of Money Laundering Act (PMLA) against former Tamil Nadu Minister K. Ponmudi and others in connection with the red sand mining scam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.