ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஜம்முவில் அனுமதி: தமிழ்நாட்டில் மட்டும் மறுப்பது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி!
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காஷ்மீரில் அனுமதி: ஆனால், தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..
தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும்போது, அமைதி பூங்கா என சொல்லப்படும் தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மாநில செயலர் ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, அக். 18 அல்லது 25 ஆம் தேதி அல்லது நவ. 1 ஆம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி டிஜிபியிடம் விண்ணப்பித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பம் தொடர்பாக எந்தப் பதிலும் கிடைக்காததால் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.எல். ராஜா, ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், “அனுமதி கோரி 21 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டுமென்ற விதி இருக்கும் நிலையில், அக். 3 ஆம் தேதி தான் விண்ணப்பிக்கப்பட்டது. மேலும், ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கும் வழித்தடம் அனுமதி அளிக்க முடியாத பகுதி. விழா காலத்தில் அனுமதி அளித்தால் பொது மக்களுக்கு அசெளகரியம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி, “ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பினார்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறிய நீதிபதி, ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பின் திராவிடர் கழகம், திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.
தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு - காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும் போது, அமைதி பூங்கா என சொல்லப்படும் தமிழ்நாட்டில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?. அனுமதியை மறுத்து தேவையற்ற விளம்பரத்தை அரசு ஏற்படுத்தி தருகிறது” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யனுடன் பேச்சுவார்த்தை நடத்த, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நாளை (அக். 15) ஒத்திவைத்தார்.
The Madras High Court has questioned why permission is denied for an RSS procession in Tamil Nadu often described as a "haven of peace" when such permission is granted in Jammu and Kashmir, a region facing a terrorist threat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.