மற்ற கட்சிக்காரர்களை அழைத்து கட்சியில் இணைப்பது கேவலம்! - தவெக மீது இபிஎஸ் தாக்கு!
தவெகவில் ஆள்கள் இல்லாததால் மற்ற கட்சிக்காரர்களை அழைத்து தங்களின் கட்சியில் இணைப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தவெகவில் நிர்வாகிகள் இல்லாததால் மற்ற கட்சிக்காரர்களை அழைத்து தங்களின் கட்சியின் இணைப்பது மிகவும் கேவலமானது என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.14) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறுகையில்,
Advertisement
Advertisement
“அதிமுகவில் இருந்து 2,000 கிளைச் செயலாளர்களும், 1,400 ஒன்றியச் செயலாளர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணையுள்ளதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறி வருகிறார்.
இது கனவிலும் நடக்காது. அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் பல ஆண்டுகால உழைப்பில், தற்போது பொறுப்பில் இருக்கிறார்கள். அதிமுகவைக் குறைத்து எடை போடுவது சரியல்ல. சட்டப்பேரவையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடங்கி தற்போது கிளைச் செயலாளர் வரை தவெக வந்துவிட்டது.
சினிமா கவர்ச்சியில் வாக்குகள் பெற்று தப்பித்தவறி ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு கிளை மற்றும் ஒன்றிய அமைப்புகளில் ஆள்கள் யாரும் இல்லை.
அவர்கள் கட்சியில் ஆள்கள் இல்லை என்பதற்காக அடுத்த கட்சிக்காரர்களை அழைத்து தங்கள் கட்சியில் இணைப்பது மிகவும் கேவலமான ஒன்றாகும். தவெகவில் யாரும் இல்லை என்பதற்காக மற்றவர்களை கூவிக்கூவி அழைக்கிறார்கள்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார், இருவரும் பல கட்சிகளில் இருந்த பின்னரே தவெகவில் இணைந்தனர்.
அவர்கள் பல ஆண்டுகளாக விஜய்யின் ரசிகராகவோ அல்லது ரசிகர் மன்றத்திலோ இருந்ததில்லை. அதிமுக பற்றி பேசினால் அவர்களுடைய கட்சியில் கவனம் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ந்து இதுபோல பேசி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Eps has stated that it is highly disgraceful for TVK to recruit members from other parties and induct them into its own ranks, simply because it lacks office-bearers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.