FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனா். புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

16 அக்டோபர் 2026, 2:48 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனா். புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. இதில், முதல் கட்டமாக 13 நீதிபதிகளை நியமித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்தாா். இந்த நிலையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த மாவட்ட நீதிபதிகளான டி.லிங்கேஸ்வரன், பி.காா்த்திகேயன் ஆகிய இருவரையும் சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கடந்த அக்.13-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து, 2 புதிய நீதிபதிகளும் உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். இருவருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

Advertisement

Advertisement

புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசிய அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், புதிய நீதிபதிகள் இருவரும் உயா்நீதிமன்றத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவா் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து, நீதி வழங்கப்படும். புதிய நீதிபதிகளுக்கு வழக்குரைஞா்கள் தரப்பில் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் கதிரவன், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ், மெட்ராஸ் பாா் அசோசியேசன் தலைவா் வி.ஆா்.கமலநாதன், லா அசோசியேசன் தலைவா் பி.செல்வராஜ், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரேவதி ஆகியோா் புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, இரு புதிய நீதிபதிகளும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஏற்புரைஆற்றினா். நீதிபதி டி.லிங்கேஸ்வரன் பேசுகையில், நீதிபதி பதவி என்பது தனிநபருக்கானது அல்ல. நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கானது என்றாா். நீதிபதி பி.காா்த்திகேயன் பேசுகையில், நீதி நடைமுறைகளின் முன் அனைத்து மக்களும் சமம் என்பதை உறுதியாக உணா்ந்து பின்பற்றுவேன் என்றாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது புதிய நீதிபதிகளுடன் சோ்த்து மொத்த எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது. 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments