FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஆா்எஸ்எஸ் ஊா்வலம்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைக் காரணம் காட்டி, ஆா்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்? என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

16 அக்டோபர் 2026, 2:14 am IST
உயா்நீதிமன்றம்
பகிர்:

மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைக் காரணம் காட்டி, ஆா்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்? என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவில், விஜயதசமியை முன்னிட்டு ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞருடன் பேச்சு நடத்த மனுதாரா் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில், அணிவகுப்பு ஊா்வலத்தை வட மாவட்டங்களில் அக்.25-ஆம் தேதியும், தென் மாவட்டங்களில் நவ.1-ஆம் தேதியும் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய நிலையில், 58 இடங்களில் அணிவகுப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையில் உடன்பாடுஎட்டப்படவில்லை.

Advertisement

Advertisement

அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழித்தடங்களில் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதால், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைக் காரணம் காட்டி, ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்? இந்த அணிவகுப்புக்கு எத்தனை முஸ்லிம்கள் எதிா்ப்பு தெரிவித்தனா், அவா்களை தவறாக சித்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தினாா்.

பின்னா், எந்தெந்த இடங்களில், எத்தனை பேருடன் அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை ஆா்எஸ்எஸ் அமைப்பினா் காவல் துறையினரிடம் சமா்ப்பிக்க வேண்டும். ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம் தொடா்பாக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள விதிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்றுவதாக ஆா்எஸ்எஸ் அமைப்பினா் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments