FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனா

பெரியார் அறிவுலகம் திறப்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆற்றாமையை வெளிப்படுத்துவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.

44 வினாடிகள் முன்பு
மு.க.ஸ்டாலின் - ஆதவ் அர்ஜுனா. - (கோப்புப்படம்)
பகிர்:

பெரியார் அறிவுலகம் திறப்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆற்றாமையை வெளிப்படுத்துவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.

கோவையில் முதல்வர் விஜய் இன்று (அக். 16) திறந்துவைத்த பெரியார் அறிவுலகம், திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாக தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது” எனப் பதிவிட்டார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அந்தப் பதிவில், “பெரியார் அறிவுலகமும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பொறாமைப் புலம்பல்களும்.... மக்களின் தேவைகளில் இருந்துதான் திட்டங்கள் உருவாகின்றன.

ஒரு திட்டம் என்பதையோ... அதை நிறைவேற்றும் நடவடிக்கையோ ஒரு தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் கிடையாது. அதுவும் அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், மக்களின் தேவைகளைத் தீர்ப்பதற்காக, மக்களின் வரிப்பணத்தில், அப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு, திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதை நடைமுறைக்கு கொண்டுவருகிறது.

இடையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், அடுத்து வரும் அரசு அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவருவதில் என்ன பிழை இருக்க முடியும்? புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, முந்தைய அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே, ஒரு திட்டத்தையோ... கட்டுமானத்தையோ நிறுத்தினால்தான் அதில் குற்றம் சொல்ல முடியும்.

மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு, முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்றாலும், அதை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடரும் ஒரு அரசாங்கத்தை யார் குறை சொல்ல முடியும்? என்ன குற்றம் காண முடியும்? அப்படிச் செய்வதற்கு யாருக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?

2016-2021 காலகட்டத்தில் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு - ஏறத்தாழ முடியும் நிலையில் இருந்த பல திட்டங்களை, அதன்பிறகு வந்த தி.மு.க தலைமையிலான அரசின் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்; சில திட்டங்களை அன்றைக்கு துணை முதல்வராக இருந்த உதயநிதியும் தொடங்கி வைத்தார். மற்ற தி.மு.க அமைச்சர்களும் தொடங்கி வைத்துள்ளனர்.

அதைத் தாங்களே சிந்தித்து செயல்படுத்தியதைப் போல, கோடிக்கணக்கில் அரசு பணத்தை - மக்கள் பணத்தை விரயமாக்கி விளம்பரமும் செய்து கொண்டனர். அதற்கு உதாரணமாக ஒன்றல்ல... இரண்டல்ல... ஏராளமான திட்டங்களைப் பட்டியல் போட முடியும். குறிப்பாக, கொங்கு மண்டல மக்களின் பல்லாண்டு கால கனவாக இருந்த அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

80 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டன. கொரோனா தொற்று பிரச்சனையால் 20 சதவிகித வேலைகள் முடியாமல் இருந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்படி முடிக்கப்பட்டிருந்த வேலைகளை 2022-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024 - ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து விளம்பரம் செய்து கொண்டார்.

அதுபோல, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 நகரங்களில் அமைந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 2020-ஆம் ஆண்டு, முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டி வேலைகள் தொடங்கப்பட்டன.

90 சதவிகித வேலைகள் முடிந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் அந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைத்தார். அப்போது, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று மு.க.ஸ்டாலின் விளம்பரம் செய்து கொண்டார்.

கோவை மருத்துவக் கல்லூரியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் JICA (Japan International Corporation Agency) பன்னோக்கு சிறப்புப் பிரிவு கட்டிடத்திற்கான வேலைகள், அந்தக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களை 150-லிருந்து 250 ஆக உயர்த்துவதற்காக ரூ. 80 கோடி மதிப்பிலான புதிய கல்வித் தொகுதி, விடுதிகள் மற்றும் நூலகக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா, முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியதுதான்.

அவற்றில் மீதம் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு, மார்ச் 2024-இல் அன்றைய முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, அதைத் தனது ஆட்சியின் சாதனையாக சொல்லிக் கொண்டிருந்தார். இதே கதைதான் திருச்சி சாலை மேம்பாலம், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலங்கள் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டவை.

அவற்றுக்கான திறப்பு விழாக்களை எல்லாம் தி.மு.க ஆட்சியில் மு.க.ஸ்டாலின் செய்தார். அதுபோலவே, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுக்கான அடித்தளம் போடப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில்தான்.

அதைத்தான் ஜனவரி 2022 அன்று அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவரசமாகத் திறந்து வைத்தார். மேலும், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பழங்குடியினருக்கான சிறப்பு வார்டு உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட புதிய 700 படுக்கை மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தை 6 ஏப்ரல் 2025 திரு. மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்படி ஒரு அரசாங்கம் தொடங்கிய வேலைகளைத் தொடர்ந்து செய்து அதை திறந்து வைப்பது வழக்கமாக நடைபெற்றதுதான். அது சரியும்கூட. காரணம், திட்டங்களும், அதன் பயன்களும் "மக்கள் நன்மைக்காக..." மட்டுமே. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் புதிய நம்பிக்கையாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு முந்தைய அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில், மக்கள் நலனுக்கானவை என்பனவற்றை அப்படியே தொடர்கிறது; குறைபாடுள்ள திட்டங்களை மேம்படுத்தி செயல்படுத்துகிறது; பாதியில் நிற்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது.

அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் போன்றவை, "மக்கள் நலனே முக்கியம்" என்ற அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் தமையிலான த.வெ.க அரசும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்காக... மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அவை. அந்த அடிப்படையில்தான், கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்துள்ளார்.

கோவை மக்களுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் காலம் கடந்து 'பெரியார் அறிவுலகம்' பயன் அளிக்கும். அதை கோவை மக்கள் உள்பட அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், குறுகிய மனப்பான்மைக்கு இடம்கொடுக்காமல், எந்தவித தம்பட்டமும் அடித்துக்கொள்ளாமல் இன்று 'பெரியார் அறிவுலகம்' திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் தம்பட்டம் அடித்தோ... தன்னை முன்னிறுத்தியோ முதல்வர் ஜோசப் விஜய் புகழும் பெருமையும் பெற வேண்டிய அவசியமும் இல்லை. அவருடைய புகழும் பெருமையும் உலகம் முழுதும் தமிழர்கள் வாழும் அத்தனை நாடுகளிலும் ஏற்கெனவே நிலைபெற்றுவிட்ட ஒன்று!

ஆனால், ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் எப்படி செயல்படுகின்றன என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவரைப்போல், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு செயல்படுத்தும் திட்டங்களை, தானே சிந்தித்து...

தான் ஒருவரை வடிவமைத்து, கட்டமைத்துச் செயல்படுத்தியதைப் போல "காலையில் ஒரு அறிக்கை... மாலையில் ஒரு அறிக்கை" என்று காழ்ப்புணர்வில் வெளியிட்டு தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்; பொறாமையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனை திட்டங்களை நீங்களே கொண்டுவந்தீர்கள் என்று மக்கள் உணர்ந்திருந்தால் உங்களை மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பார்களே... பெயரளவுக்கு திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றின் உருவாக்கத்தில் நீங்கள் செய்த ஊழல்கள், தேர்தல் நேரத்தில் வெற்று விளம்பரத்திற்காக செய்யப்பட்ட அறிவிப்புகளால் வெறுத்துப் போனதால்தானே, கொளத்தூர் மக்களே உங்களை தோல்வியடையச் செய்தார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் உங்கள் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்களை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்பினர். அதன்பிறகும், உண்மையை உணராமல், "என் திட்டம்... என் திட்டம்..." என்று இன்றும் பெருமைபேசி இப்போதும் சமூக வலைதளங்களில் பொறாமையில் பொங்கித் தவிக்கும் உங்களை மக்கள் இனிமேல் எந்தக் காலத்திலும் நம்பமாட்டார்கள்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது என்ற வள்ளுவரின் குறளுக்குப் பொருள்,

"பொறாமை கொண்டவரைக் கெடுப்பதற்கு வேறு எந்தப் பகையும் வேண்டாம். அவர்களின் பொறாமையே அவர்களை அழித்துவிடும்" என்பதுதான்.

அதுபோல், இப்போது பொறாமையால் பொங்கிப் பொறுமிக் கொண்டிருக்கும் உங்களை உங்கள் பொறாமையே அழித்துவிடும் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி, மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி, மக்கள் நன்மைக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும்; தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து வெற்றி நடைபோடும்!” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Public Works Minister Adhav Arjuna has criticized DMK leader M.K. Stalin, stating that his remarks at the inauguration of the 'Periyar Arivulagam' reflect a sense of frustration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments