கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மழைக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தது பற்றி...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மழைக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மழை பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், அருண்ராஜ், வெங்கடரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் மாலை மற்றும் இரவுகளில் தொடங்கிய மழை, வடசென்னை பகுதிகளான பாரிமுனை, திருவொற்றியூர், கத்திவாக்கம், தண்டையார்பேட்டை மற்றும் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய இடி-மின்னலுடன் மிக கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
சென்னையில் மழை மேலும் தீவிரமடையக்கூடும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் செல்போன்களுக்கு அலாரம் ஒலியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) குறுஞ்செய்திகள் வந்து சேர்ந்துள்ளன.
அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை சென்னைக்கு விரைகிறது. அரக்கோணத்தில் இருந்து 90 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் சென்னை விரைந்துள்ளது. வேளச்சேரியில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ள நிலையில் மேலும் 3 குழுக்கள் விரைந்தன.
இதனிடையே சென்னை உள்பட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து பருவமழை மீட்புப் பணிகளை கண்காணிக்கவும், தேங்கும் நீரை வெளியேற்றவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
CM Vijay personally conducted an inspection at the monsoon control room in Chennai's Ripon Building on Sunday regarding northeast monsoon precautionary measures.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.