மகிழ்ச்சியான திடீர் திருப்பம்!இன்ஸ்டா வீரமணிக்கு குவியும் பரிசுகள்! ஆனால்..
ஸ்வீட் கேட்ட இன்ஸ்டா பிரபலம் வீரமணிக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கிய இ-வணிக நிறுவனம்
இன்ஸ்டா பிரபலம் வீரமணி, தன் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்பவர்களிடம் இனிப்புக் கேட்டு, அது அவருக்குக் கசப்பான அனுபவமாக மாறியது, சமூக வலைத்தளங்களையும் தாண்டி, முன்னணி நாளிதழ்களில் முதல் பக்கச் செய்தியாக மாறியிருந்தது.
மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வீரமணி, அண்மையில் கேரளம் செல்ல தன்னுடைய பின் தொடர்பாளர்களிடம் நன்கொடை பெற்று சிறப்பாக சுற்றுலா சென்று திரும்பியிருந்தார்.
ஒரு முறை ருசி கண்ட வீரமணி, அடுத்து தீபாவளிக்கு இனிப்புக் கேட்டு முகவரியுடன் விடியோ வெளியிட்டிருந்தார். இவர் ஆசையாகக் கேட்க, இவருடன் செல்லமாக விளையாட நினைத்தவர்கள் பலரும், இவரது வீட்டு முகவரிக்கு கண்ணில் பார்த்த பொருள்களை எல்லாம் பணம் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்ளும் கேஷ் ஆன் டெலிவரி முறையைப் பின்பற்றி ஆர்டர்களைப் போடத் தொடங்கினர்.
Advertisement
Advertisement
நாள், கிழமை, நேரம் என எதையும் பார்க்காமல் உணவுப் பொருள்கள் ஸ்விக்கி, ஸொமாட்டோக்களில் ஆர்டர்கள் குவிந்தன. இவர் தான் ஆர்டர் கொடுக்கவில்லை என்று மறுக்க, உணவு டெலிவரி செய்ய வந்தவர்கள் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இத்துடன் நிற்கவில்லை, டிவி, ஸ்மார்ட் போன் என பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் இவரது வீட்டுக்கு வந்தன. கதவு தட்டப்பட்டுக் கொண்டேயிருந்தது. செல்போனில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் அழைப்பு வந்து கொண்டேயிருந்தது.
அடுத்தகட்டத்துக்குச் சென்ற இவரது பின்தொடர்வோர், இவரது எண்ணைப் பயன்படுத்தி திருமண வரன் பார்க்கும் இணையதளங்கள், சிறுநீரக தானமளிக்கத் தயார் போன்ற விளம்பரங்களை வெளியிட, வீரமணி கண்பிதுங்கிப் போனார்.
உண்மையா என்பது உறுதி செய்யப்படவில்லை, ஆனால், இவரது வீட்டுக்கு ஜேசிபி மற்றும் ராணுவ பீரங்கிகள்கூட ஆர்டர் போடப்பட்டதாகவும் மீம்ஸ்கள் வந்தன. ஆர்டர்போடுவதை நிறுத்தங்கள், ஒரே ஒரு ஸ்வீட்தானே கேட்டேன் என்று கதறி விடியோ போட்டும் யாரும் விடுவதாகத் தெரியவில்லை.
இறுதியாக, வீட்டுக்கு வரும் டெலிவரி ஊழியர்களால் வீட்டை காலி செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்டார். ஓடினேன்... ஓடினேன்... என்று பராசக்தி சிவாஜி பாணியில் கதறி கதறி விடியோக்களை வெளியிட்டுக்கொண்டிருக்க, அவரது பின்தொடர்வோர் அதனை ரசித்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவரது கதறல், நாட்டின் முன்னணி நாளிதழ்களில் முக்கிய செய்தியாக வெளியாளது. அது பற்றியும் அவர் விடியோ வெளியிட்டிருந்தார். வெளியில் தலை காட்ட முடியவில்லை என்று தனது பெற்றோர் கடுமையாக திட்டுவதாகவும், இதோடு நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை வைத்தார்.
பிறகு, செய்யறிவால் உருவாக்கி தான் ராஜஸ்தானில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இறதியாக அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவரது நிலையைப் பார்த்து ஒரு ஹேப்பி என்டிங் போடலாம் என நினைத்த இன்ஸ்டாமார்ட் இ-வணிக நிறுவனம், அவருக்கு அவர் உண்மையில் கேட்ட இனிப்பு மற்றும் சில எலக்ட்ரானிக் பரிசு பொருள்களை தீபாவளி பரிசாக கட்டணமில்லாமல் வழங்கியிருக்கிறது. அதுபோல, கேரளத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், ஏராளமான பரிசு பொருள்களுடன் அவர் கேட்ட அந்த ஒரே ஒரு இனிப்பையும் வழங்கி, அவரது துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இது பற்றிய புகைப்படங்களை வீரமணி வெளியிட்டு தன்னுடைய துயரநிலைக்கு ஒரு மகிழ்ச்சியான என்டிங் கார்டு போட்டு பதிவிட்டிருக்கிறார். இதற்கிடையே, இவரது முகவரி மற்றும் செல்போன் எண் பதிவிட்டது குறித்து செய்தி வெளியிட்டு கேரள காவல்துறை, தனிப்பட்ட பாதுகாப்பில் கவனமாக இருங்கள் என்று மக்களுக்கு விழிப்புணர்வையெல்லாம் ஏற்படுத்தியிருந்தது.
ஒரு ஸ்வீட் கேட்டது குற்றமா? பாஸ் என்பது போல அவரது நிலை ஆகிவிட்டிருந்தது. தற்போது சுபம் போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.