FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இழப்பீடு வேண்டாம்! மரணக் குழிகளாக மாறாத சாலைகள் மட்டுமே போதும்!

சாலை விபத்துகளுக்கு இழப்பீடுகள் தருவதற்கு மாறாக, மரணக் குழிகளாக மாறாத சாலைகள் போடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்பது பற்றி...

22 அக்டோபர் 2026, 5:12 pm
ஒரு சோறு பதம்! திருமுடிவாக்கம் - பல்லாவரம் சாலை. - DPS
பகிர்:

சாலையில் செல்லும் இருசக்கர வாகனம், பள்ளத்தில் நிலைதடுமாறி விழுகிறது. மிகச் சரியாக அதன் பின்னால் அமர்ந்து வருபவர் கீழே விழ, அருகில் வரும் லாரி அல்லது கனரக வாகனத்தில் சிக்குகிறார். மரணம் நிகழ்கிறது. ஓரிரு நாள்களில் அரசு இழப்பீடு அறிவிக்கிறது. ஒரு சில லட்சங்கள்.

இந்த நிலை என்று மாறும்? என்பதே நாள்தோறும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்தும், வாகனங்களிலும் சாலையில் நடந்து, கடந்து செல்லும் எண்ணற்ற மக்களின் கேள்வி.

மழை நீர் தேங்கியிருக்கும் சாலைகளில் இருக்கும் பள்ளத்தில் வாகனங்கள் சரிந்து உயிரிழப்புகள் நேரிடுவது காலங்காலமாக நடந்து வருகிறது. இந்த உயிரிழப்புகளை அரசு நினைத்தால் தவிர்க்க முடியும். மாறாக உயிரிழப்புகளின்போது இழப்பீடுகளை கொடுப்பதே அரசின் வேலை என நினைக்கிறது.

Advertisement

Advertisement

எத்தனை கட்சிகள் மாறினாலும், மழைக்காலத்தில் மரண குழிகளாக மாறும் சாலைகளின் காட்சிகள் மாறுவதில்லை. சாலையில் விழுவது, சாவது சாதாரணமாகிவிட்டது.

நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சர்வீஸ் சாலையின் நடுவே ஒரு அசாதாரண பள்ளம். பள்ளத்தின் கோர முகத்தை மூடியபடி மழைநீர். அவ்வழியே பள்ளத்தை கவனிக்காமல் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விழுகின்றன. இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற பெண் லாரியில் சிக்குகிறார். உயிரிழப்பு மட்டுமல்லாமல் படுகாயங்களும் நேரிடுகின்றன.

அங்கே இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் இன்று ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைக்கிறது. இப்போதுதான் காவல்துறை, அந்த சாலையின் ஒப்பந்ததாரருக்கு, சாலையை சீரமைக்க உத்தரவிட்டுள்ளதாம். ஒரு சாலையை சீரமைக்கக்கூட இத்தனை பேர் தங்கள் உயிரை தியாகம் செய்ய வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.

சாலைகளுக்கும் மழைக்கும் எப்போதுமே எட்டாம்பொருத்தம்தான். நன்றாக இருக்கும் சாலைகளும் ஒரு சிறு மழைக்கே பல்லாங்குழிகளாகிவிடுகின்றன. சில நாள்களில் ஒவ்வொரு பள்ளமும் பழுங்கிணறாக மாறி, மரண படுகுழிகள் போல கையில் தண்டாயுதத்தை வைத்துக்கொண்டு, சிக்ஸ்ர் அடிக்கக் காத்திருக்கும். மிகச் சரியாக லாரி வரும்போது, இரு சக்கர வாகனத்தை தட்டிவிட்டு, அதில் அமர்ந்து வருபவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டு ஒரு மாதத்தில் இத்தனை உயிர்களை பறிக்க வேண்டும் என்று தன்னுடைய டெட்லைனை முடித்துக் கொண்டு அடுத்த மாதத்துக்கான கணக்கையும் சேர்த்து நிறைவு செய்துகொள்ளும்.

இப்படியே நாள்தோறும் வெறும் பள்ளத்தில் விழுந்து எத்தனை பேர் சாவது? இதே ஜல்லியும், தாரும் ஊற்றி போடும் தேசிய நெடுஞ்சாலைகள் நன்றாக இருக்கும்போது, உள்ளூர் சாலைகளுக்கு மட்டும் ஏன் இந்த பாராமுகம்.

தேசிய நெடுஞ்சாலைக்கு ஒதுக்கும் நிதியும், உள்ளூர் சாலைகளுக்கு ஒதுக்கும் நிதிக்கும் வேறுவேறுதான். அதில் பயன்படுத்தும் பொருள்களின் தரத்திலும் மாறுபாடு. அது மட்டுமா, சாலையைப் போடும் பொறியியல் தொழில்நுட்பமே வேறு வேறு.

தேசிய நெடுஞ்சாலைகள், பொருளாதாரத்துக்கான காரணியாக இருப்பதால் அதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் அரசுகள், மாநில சாலைகளில் என்ன எரும்புகளா ஊர்ந்து செல்கின்றன? அதிலும் உழைக்கும் மக்கள்தானே செல்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பான மக்கள் செலுத்தும் வரிப்பணம்தானே நாட்டை இயக்குகிறது. அவர்களுக்கு போடும் சாலைகளை நல்ல தரத்தில் போட்டால், மீண்டும் சீரமைக்கும் செலவும் மிச்சம்தானே? உயிரிழப்புகளுக்கு இழப்பீடும் மிச்சமாகுமே?

ஒரு மழைக்கே பிய்ந்து தேயும் சாலைகளை ஏன் போடவேண்டும். ஒரு சில கிலோ மீட்டர்களுக்கே கோடிக்கணக்கில் செலவிட்டு தேசிய நெடுஞ்சாலைகள். அதற்கு சுங்கச் சாவடி அமைத்து கட்டண வசூல். ஆனால் உள்ளூர் சாலைகளுக்கு சில லட்சங்களில் நிதி ஒதுக்கி, அவற்றைப் பராமரிப்பது என்ற நடைமுறையே இருப்பதில்லை.

பல்லாங்குழி போல காட்சி தரும் சாலைகள்

போக்குவரத்து நெரிசலுக்கும் முற்றுப்புள்ளி

சாலைகள் சீராக இருந்தால் போக்குவரத்து நெரிசலும் குறைந்து, மழைக்காலங்களில் ஏற்படும் முக்கிய பிரச்னையே சரியாகிவிடும். நடந்து செல்வோரும் மழை நீர் இருந்தாலும் பயமின்றி நடந்து செல்லலாம். மழை நீர் தேங்கியிருந்தாலும் சாலை நன்றாக இருந்தால் வாகன ஓட்டிகள் சென்றுகொண்டேயிருக்கலாம், தட்டுத்தடுமாறி ஓட்டும் நிலையும் வராது.

தேசிய நெடுஞ்சாலைகள் Vs உள்ளூர் சாலைகள்

தேசிய நெடுஞ்சாலைகள் நீண்ட காலம் நீடித்து உழைப்பதற்காக மாடிஃபைட் எமல்ஷன்கள் மற்றும் விஜி-30/விஜி-40 தர ஜல்லி போன்ற உயர்தர இடுபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளூர் சாலைகளில் பெரும்பாலும் தரம் குறைந்த ஜல்லி மற்றும் மண், குறைந்த அளவில் தார் பயன்படுத்தப்படுவதோடு, பழைய சாலையை அப்புறப்படுத்திவிட்டு புதிய தார் சாலை போடப்படாமல் அவசர அவசரமாகப் போடப்படுவதும் விரைவாக சேதமடையக் காரணமாகின்றன. சில கிராமங்களில் போடும் சாலைகளை மக்களே கைகளில் பிய்த்து அதிரசம் போல எடுத்துச் செல்வதை எத்தனையோ விடியோக்களில் பார்த்திருக்கிறோம்.

தேசிய நெடுஞ்சாலையின் சாலைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கடுமையான தொழில்நுட்ப வழிகாட்டு நெறிமுறைகள், செயல்பாட்டு உத்தரவாதம், பொறுப்புக்கூறல் விதிகளுக்கு உள்பட்டு போடப்படுகின்றன. சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் தொடர்ந்து சாலைகளை பராமரிக்கவும் வேண்டும். பிரச்னை எழுந்தால் ஒப்பந்ததாரர் பதில் சொல்ல வேண்டும்.

ஆனால், உள்ளூர் சாலைகளுக்கு வழிகாட்டுதல்கள் இருந்தாலும் அதனை கடுமையாக பின்பற்றும் அமைப்புகள் இல்லை, சாலையைப் போடும் ஒப்பந்ததாரர்கள் தொடர்ச்சியாக அந்த சாலையை கண்காணித்து பராமரிக்கும் பொறுப்பை ஏற்பதில்லை. பெரும்பாலான சாலைகள் முக்கிய தலைவர்களின் வருகையின்போதுதான் செப்பனிடப்படுகின்றன. அதுவும் இப்போது சாலையில் ஒட்டுப்போடும் வசதி வந்த பிறகு கேட்கவே வேண்டாம்.

ஹெல்மெட் அணிய வேண்டும், மாசுகட்டுப்பாட்டு சோதனை, வாகனக் காப்பீடு என ஏராளமான கெடுபிடிகளை வாகன ஓட்டிகளுக்கு விதிக்கும் அரசுகள், சாலைகளை சீரமைப்பதிலும் அதே அக்கறையை செலுத்த வேண்டாமா?

summary

Instead of providing compensation for road accidents, it should be made mandatory to construct roads that do not turn into death traps...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments