சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியிருப்பது பற்ற....
சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முடக்கி வைத்துள்ள தவெக அரசுக்கு அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னையில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் – ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த இத்திட்டத்தை முடக்கி வைத்துள்ள தவெக அரசுக்குக் கடும் கண்டனம்!
சென்னை மாநகர மக்களுக்குச் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்கும் உயரிய நோக்கில், ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தற்போது செயல்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக நாளிதழ்களில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்நிலையங்கள் முடங்கியிருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்களின் அன்றாடக் குடிநீர்த் தேவைக்காகத் தனியார் நிறுவனங்களிடம் ரூ.40 வரை கொடுத்து ஒரு கேன் தண்ணீரை வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தை மக்களுக்கு தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஏற்கெனவே அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி வழங்குவதாக அறிவித்துவிட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் பாலிஷ் செய்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார்களும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஏழை, எளிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் தோல்வியடைந்துள்ள தவெக அரசு, தற்போது இலவசக் குடிநீர் வழங்கி வந்த திட்டத்தையும் முடக்கி, மக்கள் தனியாரிடம் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலையை உருவாக்கியிருப்பது, தனியார் தாராளமயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசின் நோக்கமா என்ற கேள்வியை எழுப்புகிறது?
இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதிலேயே மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் சூழலில், அவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முடங்கச் செய்திருப்பது தவெக அரசின் மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்து, அவற்றைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதுடன், ஏழை, எளிய மக்களுக்கு முன்பு போலவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
AMMK General Secretary TTV Dhinakaran has condemned the TVK government for keeping the Amma Water Purification Plants in Chennai non-operational.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.