FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஏழைகளின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்படும் அரசு நிலங்கள்: திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பான, 1949-ஆம் ஆண்டு திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

27 அக்டோபர் 2026, 12:22 am
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பான, 1949-ஆம் ஆண்டு திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களின் வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்வதற்காக அரசு நிலம் வழங்கும் திட்டம் கடந்த 1949-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1967-ஆம் ஆண்டு, முன்னாள் ராணுவ வீரரான மாதவன் என்பவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் 3.89 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், 72 சென்ட் நிலத்தை தனியாா் நிறுவனத்துடன் இணைந்து வீட்டு மனைகளாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதற்காக, சம்பந்தப்பட்ட நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி மாதவனின் மனைவி நளினிஸ்ரீ சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, பட்டா வழங்க உத்தரவிட்டிருந்தாா். தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா் தாலுகாவில் உள்ள தாழம்பூா் பகுதியில், 583.20 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த முறைகேடுகள் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். எனவே, பட்டா வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களின் வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்வதற்காக அரசு நிலம் வழங்கும் திட்டம் கடந்த 1949-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில் மனுதாரரின் கணவருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வகை நிலங்களை வா்த்தக பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

அரசு நிலங்கள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை. எனவே அரசு நிலங்களை ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்காக ஒதுக்கும்போது, அவற்றை இதுபோன்ற வா்த்தக பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது அந்த திட்டத்தின் நோக்கத்தை தோல்வியுறச் செய்துவிடும். மேலும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பான, 1949-ஆம் ஆண்டு திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

தாழம்பூா் நில ஒதுக்கீடு முறைகேடு தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, முன்னாள் ராணுவ வீரரின் நிலத்துக்குப் பட்டா வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments