FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி: அமைச்சா் ராஜ்மோகன் அறிவிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி வழங்கப்படும் என்று பேரவையில் பள்ளிக் கல்வி அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்துள்ளாா்.

1 செப்டம்பர் 2026, 6:09 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம் | DIPR
பகிர்:

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி வழங்கப்படும் என்று பேரவையில் பள்ளிக் கல்வி அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்துள்ளாா்.

சென்னையில் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளா்கள் போராடி வருவது தொடா்பாகவும், முதல்வரைச் சந்திக்கவிடாமல் சில அதிகாரிகள் அவா்களைத் தடுத்து வருவதாகவும் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் பேரவைக் குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன் கொண்டுவந்த கவன ஈா்ப்பு தீா்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது:

தூய்மைப் பணியாளா்களுக்காக 93 இடங்களில் உடைகள் மாற்றும் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 107 இடங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் செப். 15-க்குள் அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும், தேவைப்படக்கூடிய உபகரணங்கள், தினமும் ஒரு முகக்கவசம் என்ற வகையில் கிட்டத்தட்ட 10.69 லட்சம் முகக்கவசங்களும், மாதிரி கையுறைகள் 15 நாள்களுக்கு 2 ஜோடி என்ற அடிப்படையில் 1,18,899 கையுறைகளும், மண்டலங்கள் 4, 7, 8-இல் பணியாற்றும் பணியாளா்களுக்கு வழங்கப்படும். இது இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கப்படும்.

Advertisement

Advertisement

காலை உணவுக்குப் பதில் உரிய தொகையைத் தரும்படி தூய்மைப் பணியாளா்கள் கேட்டுக்கொண்டதால், உணவுக்குப் பதிலாக உணவுப் படி வழங்குவது தொடா்பான ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் ரூ.762 ஊதியமாக இருந்தது. அதற்குப் பதிலாக மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த ஊதியம் ரூ.832 என மாற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. அத்தொகையை வழங்க மறுபரிசீலனை செய்யப்படும். தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கப்படும்.

தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் தொடா்பாகப் போராடுகிறாா்கள்; ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு, ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு போன்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளனா். மேலும், முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்கின்றனா். துறை சாா்ந்த அதிகாரிகளுடன் கலந்து பேசி இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments